சென்னை:  
பிஎஸ்என்எல் சட்டவிரோத தொலைபேசி இணைப்பக முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது, அதிவேக பிராட்பேன்ட் இணைப்புகளை சட்ட விரோதமாக சன் தொலைக்காட்சிக்கு பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரையும் சி.பி.ஐ. நீதிமன்றம் விடுவித்தது. சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததுடன் வழக்கை மீண்டும் விசாரிக்க சி.பி.ஐ நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.

இந்நிலையில் இந்த வழக்கு, சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி ஆர்.வசந்தி முன்பு வியாழனன்ற விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட கலாநிதி மாறன், தயாநிதி மாறன், பி.எஸ்.என்.எல் பொது மேலாளராக இருந்த பிரம்மநாதன், அந்நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர் வேலுசாமி, தயாநிதி மாறனின் தனிச் செயலாளராக இருந்த வேதகிரி கவுதமன், சன் தொலைக்காட்சியின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், சன் தொலைக்காட்சி எலக்ட்ரீஷியன் ரவி ஆகிய 7 பேரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

அப்போது அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீதிபதி வாசித்தார். இந்த குற்றச்சாட்டுகளை அனைவரும் மறுத்தனர். குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 14 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.