திருவனந்தபுரம்;
சபரிமலை பயணத்தின் முக்கிய பகுதியான பம்பையில் அடிப்படை வசதிகளை புனரமைக்க அவசர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கூடிய உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்காக மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்படுவார். சிறந்த முகவர் மூலம் உடனடியாக ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெருவெள்ளப் பெருக்கத்தால் பம்பையில் அடிப்படை வசதிகள் முற்றாக தகர்ந்துவிட்டதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூட்டத்தில் சுட்டிக்காட்டினர். பம்பை ஆறு வழிமாறி பாய்ந்த காரணத்தால் ஒரு பாலம் நீரில் மூழ்கியது. பம்பையில் உள்ள நடைப்பந்தல் முற்றாக நாசமானது. பம்பையில் மணப்புறம் கழிவறை வளாகம் இடிந்து தகர்ந்துள்ளது. வாகன நிறுத்துமிடங்கள் தரைமட்டமாயின. காவல் நிலையத்தின் ஒரு பகுதியும் இடிந்துவிட்டது. சுற்றிலும் உள்ள சாலைகள் காணாமல் போயின. பொதுப்பணித்துறையின் 1115 கிலோமீட்டர் சாலைகள் தகர்ந்துள்ளன. பம்பையில் உள்ள மருத்துவமனையும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. நீரேற்று நிலையமும் முடங்கியது.

மூன்று பாலங்களை ஒரே நேரத்தில் கட்ட ராணுவத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் சபரிமலை சீசன் தொடங்க உள்ளது. அதற்கு முன்பு அடிப்படை வசதிகள் அனைத்தும் புனரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.