மும்பை;
பணமதிப்பு நீக்க நடவடிக்கை தவறானால் என்னை பொது இடத்தில் வைத்து தண்டியுங்கள் என்று பிரதமர் மோடி கூறினார். இன்னும் சொன்னால், ‘என்னை பெட்ரோல் ஊற்றி எரித்து விடுங்கள்’ என்றே பகிரங்கமாக அறிவித்தார்.

ஆனால், பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளில் 99.3 சதவிகிதம், அதாவது ரூ. 15 லட்சத்து 41 ஆயிரம் கோடி ரூபாயில், ரூ. 15 லட்சத்து 31 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக்குத் திரும்பி வந்து விட்டது; ரூ. 10 ஆயிரத்து 720 கோடி மட்டுமே வரவில்லை என்று தற்போது ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை தவறாகி விட்டதாக அந்த அறிக்கை அமைந்துள்ளது.இந்நிலையில், பணமதிப்பு நீக்கம் தவறு என்று ரிசர்வ் வங்கியே கூறியிருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஏற்கெனவே ஒப்புக்கொண்டதை தற்போது அவருக்கு நினைவுபடுத்துவதாகவும், தண்டனையை ஏற்கத் தயாரா? என்று அவரைக் கேட்க விரும்புவதாகவும் காங்கிரஸ் மக்களவைக்குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேட்டுள்ளார்.

பிரதமர் மோடியை தில்லியில் உள்ள விஜய் சவுக் பகுதியில் தண்டிக்கலாமா அல்லது வேறு எங்குமா? என்றும் கேட்டிருக்கும் மல்லிகார்ஜூன கார்கே, பிரதமர் மோடி தண்டனைக்கு தயாராக இருப்பார் என நினைக்கிறேன் என்றும் கிண்டலாக கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.