திருப்பூர்,
தமிழகத்தில் நீர் நிலை கரைகளைப் பாதுகாக்க, 100 நாள் வேலைவாய்ப்புத் திட்ட பணியாளர்களைக் கொண்டு பனை விதைகளை நடவு செய்ய வேண்டும். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் செ.நல்லசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஏரி, குளம், குட்டை, கண்மாய்களின் கரைகள் உடைப்பு ஏற்படாமல் இருக்கவும், கரைகளைப் பாதுகாக்கவும், பனை விதைகளை ஊன்றி பனை மரங்களை வளர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இப்போது பனம்பழங்கள் கிடைக்கும் பருவம் என்பதால் இதுவே நடவு செய்ய ஏற்ற தருணம் ஆகும். வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக இந்தப் பனை விதைகளை வேலைவாய்ப்பு உறுதி திட்டப் பணியாளர்களைக் கொண்டு நீர்த்தேக்கக் கரைகளிலும், ஆறுகள் மற்றும் கால்வாய்களின் கரைகளிலும், அரசின் புறம்போக்கு நிலங்களிலும் நடவு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மரவள்ளி பயிர்
மரவள்ளி பயிர் இந்திய அளவில் தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. ஜவ்வாிசி, ஸ்டார்ச் ஆலைகள் இங்குதான் கூடுதலாக உள்ளன. ஒரு டன் ரூ.12 ஆயிரத்திற்கு விற்று வந்தது தற்போது ரூ.6ஆயிரமாகக் குறைந்து போனது. ஜவ்வரிசி கலப்படமே இதற்கு முதன்மை காரணம். இதனால் மரவள்ளி சாகுபடியாளர்களும், நுகர்வோரும் பாதிக்கப்படுகின்றனர். அரசாங்கம் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தமிழ்நாட்டிற்கு வந்திருக்கும் தலைகுனிவு, இவ்வாறான போக்கை தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு கண்டிக்கிறது.  முக்கொம்பு மதகுகள் உடைந்ததற்கு மணல் கொள்ளையே முதன்மைக் காரணம், பராமரிப்பின்மை இரண்டாவது காரணம் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் செ.நல்லசாமி கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: