சென்னை:
லிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு முறைகேடுகளைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதித்தேர்விலும் முறைகேடு புகார் கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.தொடர்ச்சியாக அரசுத் தேர்வுகளில் நடக்கும் மோசடிகளுக்கும் முறை கேடுகளுக்கும் தமிழக அரசே முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வினை ஆசிரியர் தேர்வு வாரியம் 2017 செப்டம்பர் 16 அன்று நடத்தியது. 1,33,568 பேர் இத் தேர்வினை எழுதினர். இதற்கான முடிவுகள் 2017 நவம்பர் 7 அன்று வெளியிடப்பட்டது. இத்தேர்வு மதிப்பெண்ணில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் தேர்வு விடைத்தாளை ஸ்கேன் செய்த தனியார் நிறுவனம் மூலம் 196 பேரின் விடைத்தாளில் முறைகேடு செய்தது கண்டறியப்பட்டது. இதன் விளைவாக பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வினை ரத்து செய்யும் அறிவிப்பை 2018 பிப்ரவரி 9 அன்று ஆசிரியர் தேர்வாணையம் வெளியிட்டது.

ஆசிரியர் தேர்விலும்…
முன்னதாக ஆசிரியர் தேர்வு வாரியம் 2017 ஏப்ரல் 29,30 தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி 2017 ஜூன் 30 அன்று முடிவுகளை வெளியிட்டது. இந்தத் தகுதித் தேர்வினை எழுதிய 7,53,000 பேரில் 34,999 பேர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு விடைத்தாளை ஸ்கேன் செய்த அதே தனியார் நிறுவனம்தான் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விடைத்தாளையும் ஸ்கேன் செய்திருந்தது. இதனால் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு நடந்ததைப் போல ஆசிரியர் தகுதித் தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது என புகார்கள் எழுந்தது. இதன் அடிப்படையில் விடைத்தாள்களை மறு மதிப்பீடு செய்ததில் 200 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

யார் பொறுப்பு?
சமீப காலமாக, ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வுகள் மட்டுமின்றி பல்கலைக்கழகத் தேர்வுகளிலும் முறைகேடுகள் அதிகரித்து வருகிறது. ஆசிரியர் நியமனம் மற்றும் இடமாறுதல், துணைவேந்தர் நியமனம், பேராசிரியர் நியமனம் என அனைத்திலும் லஞ்சமும் ஊழலும் நிரம்பி வழிவதன் தொடர்ச்சியே இத்தகைய தேர்வு முறைகேடுகள். அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த முறைகேடு குறித்து முழுமையான விசாரணை நடத்தி குற்றமிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தமிழக கல்வியமைச்சர்கள் உடனடியாக பதவி விலகி விசாரணையை எதிர்கொள்ள வேண்டுமெனவும், வேலைவாய்ப்பிற்கான போட்டித் தேர்வுகள் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடத்துவதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்துகிறது.

மீண்டும் மீண்டும் தனியாரா?
இத்தகைய சூழலில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம், பணியிடங்களை நிரப்புவதற்காக கணிணி வழித் தேர்வுகளை நடத்துவதற்காக தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் கோரியுள்ளதையும் வாலிபர் சங்கம் கண்டித்துள்ளது. தனியார் நிறுவனங்கள் மூலம் தேர்வுகளை நடத்துவதும், விடைத் தாள்களை மதிப்பீடு செய்வதும் முறைகேடுகளை அதிகரிக்கவே செய்யும். எனவே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் 04-07-2018 அன்று வெளியிட்டுள்ள விளம்பர அறிவிப்பை திரும்பப் பெறுவதுடன் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகள் அனைத்தையும் அரசே முழுமையாக நடத்த வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.