திருப்பூர்,
திருப்பூரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த முக்கிய இடங்களில் அமைக்கத் திட்டமிட்டு ரூ. 3 கோடி மதிப்பீட்டில் வாங்கப்பட்ட இரும்பு நடை மேம்பால உபகரணங்கள் 30 மாத காலமாக வெயில் மழையில் கேட்பாரற்று வீணாகிக் கிடக்கிறது.

திருப்பூர் மாநகராட்சி பகுதியில், வாகன நெரிசல் மிகுந்த ஐந்து இடங்களில், உயர்மட்ட நடைமேம்பாலம் அமைக்க கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டது. திருப்பூரில், போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகமாகி வருகிறது. முக்கிய சாலைகளில் சங்கிலித் தொடராக செல்லும் வாகனங்களால், ரோட்டை கடப்பதற்கு பொது மக்கள், மாணவ, மாணவியர், பெண்கள், முதியோர் மிகவும் சிரமப்படுகின்றனர். சில நேரங்களில், விபத்து ஏற்பட்டு பலர் காயமடைவதும், உயிரிழப்பு ஏற்படுவதும் நடைபெறுகிறது. இதற்கு தீர்வாக போக்குவரத்து நெருக்கடி மிகுந்த முக்கிய இடங்களில் இரும்பு நடை மேம்பாலம் அமைக்க மாநகராட்சி மன்றத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு இறுதியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி இரும்பால் ஆன நடை மேம்பாலம் டவுன்ஹால் பேருந்து நிறுத்தம், அருகில், காங்கயம் சாலை அமர்ஜோதி கார்டன் பகுதி டி.எஸ்.கே., மருத்துவமனை சந்திப்பு, மாநகராட்சி அலுவலக சந்திப்பு, புஷ்பா தியேட்டர் “ரவுண்டானா’ உட்பட நான்கு இடங்களில் அமைக்க திட்டமிடப்பட்டு, மூன்று கோடி ரூபாய் மதிப்பில் தளவாடங்கள் வாங்கப்பட்டன.

கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரியில் இந்த நடைமேம்பாலம் அமைக்கும் முதற்கட்டப் பணி தொடங்கப்பட்டபோது, மாநகராட்சி அதிகாரிகள், ஒவ்வொரு பகுதியாக நடை மேம்பாலம் அமைக்கப்பட்டு ஒரே மாதத்தில் பணிகள் முடிக்கப்படும்’ என்று கூறியிருந்தனர். ஆனால் ஒரு மாதம் அல்ல 30 மாதங்கள் கடந்துவிட்டது. இதுவரை ஒரு இடத்தில் கூட இந்த இரும்பு நடை மேம்பாலம் அமைக்கப்படவில்லை. இது குறித்து ஏற்கெனவே மாநகராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, நெடுஞ்சாலைத் துறை ஒப்புதல் கிடைத்ததும் இந்த பாலங்கள் அமைக்கப்படும் என்றனர். அதன்பிறகும் தாமதமானது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, திருப்பூர் நகரில் அவிநாசி சாலை – மாநகராட்சி சாலை – தாராபுரம் சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றி விரிவாக்கம் செய்யப்படும் நிலையில் விரிவாக்கப் பணி முடிந்ததும் பாலம் அமைக்கப்படும் என்றனர். ஆனால் காங்கயம் சாலை டிஎஸ்கே மருத்துவமனை சந்திப்பில் சாலை விரிவாக்கப் பணி நடைபெறவில்லை. குறைந்தபட்சம் அங்கு மட்டுமாவது இந்த நடை மேம்பாலத்தை அமைத்திருக்க முடியும். ஆனால் அதுவும் நடைபெறவில்லை. மேலும் அந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த இரும்பு நடைமேம்பால உபகரணங்களும் வேறு பகுதிக்கு மாற்றி பாதுகாப்பற்ற நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

இது ஒரு புறம் இருக்க, அவிநாசி – திருப்பூர் – அவிநாசிபாளையம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியும் இழுத்துக் கொண்டே போவதால், நகரில் பிற இடங்களில் அமைக்க வேண்டிய இரும்பு நடைமேம்பால உபகரணங்களும் வீணாகிக் கிடக்கிறது.மக்கள் பிரதிநிதிகள் இல்லாத உள்ளாட்சி நிர்வாகத்திலும் கேட்பார் யாரும் இல்லை. இதனால் மக்கள் பணம் ரூ. 3கோடி மண்ணில் கிடக்கிறது. காலப் போக்கில் இது மண்ணோடு மண்ணாக போய் விடுமோ என்ற கேள்வியும் உள்ளது. எனவே இந்த நடை மேம்பாலம் அமைக்கும் பணியை உரிய நிர்வாக ஏற்பாடுகளைச் செய்து உடனடியாக செய்து முடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பு.

Leave a Reply

You must be logged in to post a comment.