கோவை,
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குறித்து தரக்குறைவாக பேசிய தமிழக முதல்வரை கண்டித்து வியாழனன்று ஜேக்டோ – ஜியோ அமைப்பின் சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

அதிமுகவின் ஊழியர்கள் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் குறித்து மிக தரக்குறைவாக விமர்சித்து பேசிய உரையாடல் சமீபத்தில் வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, ஒரு முதல்வரே தன்னுடைய ஆட்சியின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் குறித்து உண்மைக்கு மாறாக அவதூறாக பேசியது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. முதல்வரின் இத்தகைய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் கண்டன இயக்கங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில்முன்பு வியாழனன்று அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் கூட்டணியான ஜேக்டோ – ஜியோ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜேக்டோ – ஜியோ கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்தஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்கமாவட்டச் செயலாளர் குமார், கூட்டமைப்பின் நிர்வாகிகள் அருளானந்தம், மணிகண்டன், வீரமணி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் திரளாக பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

பொள்ளாச்சி:
இதேபோல் தமிழக முதல்வரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பொள்ளாச்சி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தலைவர் தங்கபாசு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்க இணைசெயலாளர் சாமிகுணம் மற்றும் ஜேக்டோ – ஜியோ நிர்வாகிகள் நிவாஸ், பாஸ்கர், சின்னமாரிமுத்து, உ.மீராமைதீன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானனோர் கலந்து கொண்டனர்.

ஈரோடு
ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநிலச் செயலாளர் பாஸ்கர் பாபு தலைமை வகித்தார். கூட்டமைப்பின் நிர்வாகிகள் ரங்கசாமி, குமரேசன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திரளாக பங்கேற்று தமிழக முதல்வரை கண்டித்து ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.