தீக்கதிர்

சென்னை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அனைவரையும் இடமாற்றம் செய்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!

சென்னை;
சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அனைவரையும் 4 வார காலத்துக்குள் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றும் தமிழக டிஜிபியுடன் கலந்தாலோசித்து புதிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஷெனாய் நகர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவர், தனது வீட்டின் முன்புறம் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான நிலத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெனரேட்டரை அகற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை வியாழனன்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு நடைபெற்றது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், சென்னை மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்புப் பிரிவில் உள்ள அனைத்து அதிகாரிகளையும் பணியிட மாற்றம் செய்துவிட்டு, நேர்மையுடனும், திறமையாகவும் பணியாற்றும் அதிகாரிகள் குழுவை தமிழக டிஜிபியுடன் கலந்தாலோசனை நடத்தி நியமிக்க வேண்டும். தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் ஊழல் தடுப்புப் பிரிவை அமைத்து, சிசிடிவி கேமராக்களைப் பொருத்த வேண்டும் என்று நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.