பாட்னா:
ஜாமின் நீட்டிப்பு காலம் நிறைவடைந்ததை அடுத்து, பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், சிபிஐ நீதிமன்றத்தில் வியாழனன்று சரணடைந்தார்.

4 கால்நடைத் தீவன ஊழல் வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட லாலு பிரசாத், ராஞ்சியில் உள்ள பிர்ஸா முண்டா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மருத்துவ சிகிச்சைப் பெறுவதற்காக, அவருக்கு கடந்த மே மாதம் 11-ஆம் தேதி 6 வாரங்கள் ஜாமீன் வழங்கப்பட்டது. பின்னர், ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரையிலும், ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரையிலும், ஆகஸ்ட் 27-ஆம் தேதி வரையிலும் அடுத்தடுத்து மூன்று முறை ஜாமீன் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் லாலு பிரசாத் யாதவ் தனது ஜாமீனை மேலும் நீட்டிக்குமாறு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி, வரும் 30-ஆம் தேதிக்குள் ராஞ்சி சிபிஐ நீதிமன்றத்தில் நேரில் சரணடைய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். நீதிமன்ற உத்தரவையடுத்து சிபிஐ நீதிமன்றத்தில் லாலு பிரசாத் யாதவ் வியாழனன்று சரணடைந்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.