சென்னை,
கேரளாவில் கடந்த வாரம் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளையும், உடமைகளையும் இழந்துள்ளனர். 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கேரளம் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

இந்த பாதிப்புகளை கண்டு பொதுமக்கள், தன்னார்வ அமைப்புகள், அரசியல்கட்சிகள், திரைத்துறையினர் என பலதரப்பினரும் நிவாரண உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய மனிதாபிமான சகோதர உணர்வுடன் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவன தொழிலாளர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தை கேரள மாநில மக்களின் நிவாரணத்திற்கு உதவிட முன்வந்து சம்பந்தப்பட்ட துறை மற்றும் நிறுவன அதிகாரிகளிடம் தொழிற்சங்கங்கள் கடிதம் அளித்துள்ளன. ஆனால், தமிழக அரசு இம்மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யாமல், விருப்ப கடிதம் அளிப்பவர்களிடம் மட்டுமே ஊதியத்தை பிடித்தம் செய்ய உத்தரவிட்டுள்ளதாக தெரிய வருகிறது. இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், “மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் அரசு ஊழியர்களும், தொழிலாளர்களும் ஒரு நாள் ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர்.  ஆனால், தமிழக அரசு தற்போது விருப்பத்தின் பேரில் ஊதியம் பிடித்தம் செய்வது என்று முடிவு செய்துள்ளது வெந்தபுண்ணில் வேலைபாய்ச்சுவதாகவே உள்ளது. இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டு நிர்கதியாய் உள்ள கேரள மக்களுக்கு உரிய காலத்தில் உதவுவதே பொருத்தமானதாகும். இதை ஒரு சிறப்பு நேர்வாக எடுத்து சங்கங்களின் கடித அடிப் படையில் பணப்பிடித்தம் செய்வதே உதவிகரமாக இருக்கும்.

இப்பிரச்சனையில் தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் ஒருநாள் ஊதியம் அளிக்க முன்வந்துள்ள துறைகள் மற்றும் அரசு நிறுவனங்களில் ஆகஸ்ட் மாத ஊதியத்தில் ஒருநாள் ஊதியத்தை மொத்தமாக பிடித்தம் செய்து கேரள மாநில முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையினை துரிதப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Leave A Reply

%d bloggers like this: