புதுதில்லி;
பணமதிப்பு நீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து, 99.3 சதவிகித அளவிற்கான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் மாற்றப்பட்டு விட்டன, ரூ. 13 ஆயிரம் கோடி அளவிற்கான நோட்டுக்கள் மட்டுமே வங்கிக்கு வரவில்லை என்று ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கான நோட்டுக்களும் கூட நேபாளம், பூடான், வங்கதேசம், பர்மா ஆகிய அண்டை நாடுகளில் மாற்றப்படாமல் தங்கியிருக்க வாய்ப்பு உள்ளதாக பொருளாதார வல்லுநர் பிரணாப் சென் கூறியுள்ளார். “பணமதிப்பு நீக்க நடவடிக்கை தோல்வி அடைந்து விட்டதாக எதிர்க்கட்சிகளும், வெற்றியடைந்து விட்டதாக ஆளும் கட்சியினரும் தெரிவிக்கின்றனர்; ஆனால், அந்த நேரத்தில் மக்கள் அடைந்த துன்பமும் துயரமும் ஒருபோதும் ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும்.
பணமதிப்பு நீக்க காலத்தில், 3 லட்சம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், 10 ஆயிரத்து 720 கோடி ரூபாய் அளவிற்கான நோட்டுக்கள்தான் மதிப்பிழப்பு செய்யப்பட்டுள்ளன. இந்த நோட்டுக்களும் கூட, நேபாளம், பூடான், வங்கதேசம், பர்மா ஆகிய நாடுகளில் மாற்றப்படாமல் தங்கியிருக்க வாய்ப்பு உள்ளது.

மற்றொரு விஷயம், பணப்புழக்கத்தைப் பற்றிய விவரம் அறிந்தவர்கள் யாரும், கறுப்புப் பணத்தை ரொக்கமாக வைத்துக் கொள்ள மாட்டார்கள்; மிகக் குறைந்த அளவிலான கறுப்புப்பணத்தை மட்டுமே அவர்கள் கையில் வைத்திருப்பார்கள்.எனவே, பணமதிப்பு நீக்கம் தோல்வி அடையும் என்பதும், மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பணம் முழுமையாக வங்கிகளுக்கு வந்துசேரும் என்பதும் ஏற்கெனவே எதிர்பார்த்ததுதான்” என்று பிரணாப் சென் தெரிவித்துள்ளார்.
இவர் புள்ளிவிவரங்கள் துறையின் முன்னாள் இயக்குநர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.