ஈரோடு,
ஈரோடு மாட்டுச் சந்தையில் ரூ.3 கோடிக்கு கால்நடைகள் விற்பனையாகின.

ஈரோடு கருங்கல்பாளையத்தில் காவிரிக் கரை சோதனைச்சாவடி அருகே வாரந்தோறும் புதன், வியாழன் ஆகிய இரு நாட்களில் மாட்டுச் சந்தை நடைபெறுகிறது. அதில், புதனன்று வளர்ப்பு மாடுகளும், வியாழனன்று கறவைப் பசு மாடுகளும், எருமை மாடுகள், வளர்ப்புக் கன்றுக்குட்டிகளும் விற்பனை செய்யப்படுகின்றன. தென்னிந்தியாவின் மிகப்பெரிய இச்சந்தைக்கு தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வருகை புரிகின்றனர். மேலும், கேரளா,கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகளும் அதிகளவில் வருகின்றனர். இந்நிலையில் இந்த வார சந்தையில் சுமார் ரூ.3 கோடிக்குவணிகம் நடைபெற்றது. இதுகுறித்து, மாட்டுச்சந்தை மேலாளர் ஆர்.முருகன் கூறுகையில், இந்த வாரச் சந்தையில் 300 பசு மாடுகள், 250 எருமைகள், 200 வளர்ப்புக் கன்றுகள் விற்பனைசெய்யப்பட்டன. இதில், பசுமாடு ரூ.16 ஆயிரம் முதல் ரூ.34 ஆயிரம் வரையிலும், எருமை மாடு ரூ.18 ஆயிரம் முதல் ரூ.36 ஆயிரம் வரையிலும், வளர்ப்புகன்றுகள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரையிலும் விற்பனையாகியுள்ளது. மொத்தத்தில் சுமார் ரூ.3 கோடிக்கு வணிகம் நடைபெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.