திருப்பூர்,
திருப்பூரில் 30 வயதில் இருந்து 40 வயதுக்கு உட்பட்ட இருதய நோயாளிகள் அதிகரித்து வருவதாக ரேவதி மெடிக்கல் சென்டர் மருத்துவமனை இருதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் நாகராஜ் தெரிவித்தார்.

திருப்பூர் ரேவதி மெடிக்கல் சென்டர் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தேவசிங் சாரங்கி, இருதய நோய் சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் நாகராஜ் ஆகியோர் வியாழனன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: சவுதி அரேபியா நாட்டைச் சேர்ந்த டமாம் என்கிற நகரில் இருந்து வந்த பாத்திமா அலி அல்- ஜெராட் (64) என்ற மூதாட்டிக்கு ரேவதி மருத்துவமனையில் இரண்டு மூட்டுகளையும் மாற்றி அமைத்து அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.  10 வருடங்களாக நடக்க இயலாமல் படுக்கையில் இருந்த அவரை 15 நாட்கள் வழங்கிய சிகிச்சைக்கு பிறகு நேற்று தன்னிச்சையாக நடக்க வைத்துள்ளோம். உலகின் அதிநவீன செயற்கை மூட்டான ஆக்ஸினியம் என்கிற மூட்டு காலில் பொருத்தப்பட்டு அந்த பெண்மணி நலமாக உள்ளார்.

நாளை அவர் தனது சொந்த நாட்டுக்கு திரும்பி செல்ல உள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் இது முதல் முறையாக நடத்தப்பட்ட சாதனையாகும். கடந்த ஆண்டே சவுதி அரேபிய நாட்டைச் சேர்ந்த பெண்மணி மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்காக அவரது குடும்பத்தார் இங்கு அழைத்து வந்திருந்தனர். பரிசோதனை செய்தபோது, அவருக்கு முதலில் முதுகுத்தண்டு வடத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அந்த சிகிச்சையை முதலில் அளித்தோம். அதில் அவர் சிறப்பான முறையில் குணமடைந்தார். அதன்பிறகு தற்போது மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டிருந்தார். நான்கைந்து நாள் இடைவெளியில் இரு கால் மூட்டுகளும் மாற்றி அமைக்கப்பட்டது. அவரது உடல் எடை 110 கிலோவாகும். அத்துடன் ஏற்கெனவே முதுகுத் தண்டுவட சிகிச்சையும் அளிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு மயக்க மருந்து செலுத்தி சிகிச்சை அளிப்பது மிகவும் சிக்கலானதாக இருந்தது. எனினும் வெற்றிகரமாக சிகிச்சை அளித்து தற்போது அவர் ஊன்றுகோல் உதவியுடன் நடக்கிறார். கூடிய விரைவில் அவர் சுயமாக நடக்க முடியும்.

இதன் மூலம் வெளிநாட்டு நோயாளிகளுக்கும் அவர்கள் நாட்டை விட பல மடங்கு குறைவான கட்டணத்தில் உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த 12 வருடங்களில் சுமார் 2500 க்கும் மேற்பட்டவர்களுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இருதய நோய் சிகிச்சை நிபுணர் நாகராஜ் கூறுகையில், திருப்பூரில் பரபரப்பான வாழ்க்கை முறை, உரிய நேரத்திற்கு உணவு உட்கொள்ளாதது, துரிதஉணவு உட்கொள்வது, கொழுப்புச் சத்து மிகு உணவுகளைச் சாப்பிடுவது உள்ளிட்ட காரணங்களால் இளவயது இருதய நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொதுவாக கிழக்கு ஆசிய நாடுகளில் இருப்போருக்கு இருதய நோய் அதிகரித்திருப்பதாக மருத்துவ உலகில் கூறப்படுகிறது. அதேசமயம் இந்த வட்டாரத்தில் திருப்பூரில் இந்த நோய் தாக்குதல் அதிகமாக உள்ளது. முறையான உடற்பயிற்சி, உணவு முறை, அமைதியான வாழ்க்கை முறை மேற்கொள்ள வேண்டும். மேலும் இருதய நோய் அறிகுறி தெரிந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு வந்தால் காப்பாற்றி விடலாம்.

ரேவதி மருத்துவமனையில் அதிநவீன 1.5 எம்.ஆர்.ஐ. ஸ்கேன், முழுஉடல் சி.டி. ஸ்கேன் உள்ளிட்ட அதிநவீன மருத்துவ உபகரணங்கள் உள்ளன. சிறப்பு மருத்துவ நிபுணர்கள் 40-க்கும் மேற்பட்டோர் இந்த மருத்துவமனையில் உள்ளனர். 300-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் பாராமெடிக்கல் பணியாளர்கள் 24 மணி நேரமும்சேவை நோக்கத்தோடு சிறப்பு சிகிச்சை வழங்கி வருகிறார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பு கார்டியாக் கேத் லேப் என்கிற அதிநவீன இருதய ஆன்ஜியோகிராம் சிகிச்சை முறையினை திருப்பூருக்கு முதன் முதலாக அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த கேத் லேப் மூலம் 1500 க்கும் மேற்பட்ட இருதயநோயாளிகளுக்கு ஆன்ஜியோகிராம், அஞ்சியோபிளாஸ்டி, பலூன் & ச்டெண்ட், பேஸ்மேக்கர்ம் டிவைஸ்குளோசர், ஏ.எஸ்.டி.வி.எஸ்.டி. மற்றும் பிறவி இருதய குறைபாடு உள்ளவர்களுக்கும், சிறந்த சிகிச்சை அளித்து உயிர் காக்கப்பட்டு உள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் தேசிய அங்கீகார தரச்சான்றிதழ் பெற்ற முதல் மருத்துவமனை இது. இரயில்வே, முன்னாள் இராணுவத்தினர்(ஈசிஎச்.எஸ்,., ஈஎஸ்.ஐ., பி.எஸ்.என்.எல். நெசவாளர் காப்பீட்டு திட்டம், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள், இலங்கை தமிழர், டீஇஏ. மெடிபிளஸ் என அனைத்து தர மக்களுக்கும் உரிய காப்பீட்டுத் திட்டத்தில் மருத்துவம் செய்ய வசதி உள்ளது என்றனர்.அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மூதாட்டியின் மகனும் உடனிருந்து தனது தாயாருக்கு இங்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது மயக்க மருந்து மருத்துவ நிபுணர் டாக்டர் ராஜா, தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர் பூபதி ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.