ஈரோடு,
மார்க்சிஸ்ட் கட்சி குறித்து அவதூறாக பேசிய காவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக்குழு சார்பில் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்டக்குழு உறுப்பினர் அண்ணாதுரை ஆகியோர் வியாழனன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசனிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம், பவானிசாகர் காவல் நிலையத்துக்குட்பட்ட பெரியகள்ளிப்பட்டி மல்லியம்பட்டி சாலையில் தனியர் ஒருவக்கு சொந்தமான தோட்டத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் தொலைபேசி கோபுரம் அமைந்துள்ளது. கடந்த ஆக.27 ஆம் தேதியன்று இந்த தொலைப்பேசி கோபுரத்தில் ஏறி பராமரிப்பு பணி மேற்கொண்டிருந்த நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் தவறி கிழே விழுந்ததில் படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் உயிரிழந்த விக்னேசின் குடும்பத்தாருக்கு தகவல் அளித்தும், அவரது உடல் பிரேதப் பரிசோதனை மேற்கொண்டு அனுப்பி வைப்பது உள்ளிட்ட பணிகளில் உதவி செய்து வந்துள்ளனர். இந்நிலையில் தனது மகன் உயிரிழந்த தகவல் அறிந்து வந்த விக்னேஷின் தந்தை, சட்டப்படியான நிவாரணம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். ஆனால், காவல்துறை அதிகாரிகள் ரூ.4 லட்சம் வாங்கி தருகிறோம். பிரச்சனையை முடித்துக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளனர். மேலும், இவருக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் ஆதரவாக இருந்து வருவதால் ஆத்திரமுற்ற காவலர் திருலோகச்சந்தர் என்பவர், கம்யூனிஸ்ட்காரர்கள் கூறிவதையெல்லாம் கேட்க வேண்டாம் என்று கூறியதுடன், கம்யூனிஸ்ட் கட்சியினர் குறித்து மிக மோசமாக தரக்குறைவாக பேசியுள்ளார். (இதுகுறித்த வீடியோ பதிவும் ஒப்படைக்கப்பட்டது). இந்த விபத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு சட்ட ரீதியான உதவிகள் பெற்றுக்கொடுப்பது என்பதுதான் காவல்துறையின் முறையான நடவடிக்கையாக இருக்க வேண்டும். இதுதான் எங்கள்நிலைப்பாடும்.

ஆனால், அதற்கு மாறாக காவல்துறையினர் தொலைபேசி நிர்வாகத்திற்கு சாதகமான உதவிகளையே செய்து வருவதாக கருத வேண்டி உள்ளது. எனவே, இதுகுறித்து தாங்கள் விசாரணை செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எங்கள் கட்சி குறித்து அவதூறாக பேசிய காவலர் திருலோகச்சந்தர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தி உள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.