மும்பை;
விமானப் பயணத்தில் காலதாமதமானதால் ஏற்பட்ட அசதியினால் நான் சிறிது தாமதமாகவே எழுந்தேன். அப்போதுதான் பேராசிரியர் அஜித் பாருலேகரிடமிருந்து மிஸ்டு கால்கள் வந்துள்ளதைப் பார்த்தேன். அஜித் பாருலேகர், கோவா மேலாண்மை கல்வி நிறுவனத்தில் என்னுடன் பணிபுரிந்தவர். அவர் அந்த நிறுவனத்தின் இயக்குநர் ஆவார். நான் அந்த நிறுவனத்தில் மூத்த பேராசிரியராகவும் தலைவராகவும் பெரிய அளவிலான டேட்டா அனாலிக்டிக்ஸில் பணிபுரிந்து வருகிறேன். அஜீத் பாருலேகர், போலீஸ் உங்களைத் தேடி, உங்கள் வீடுள்ள வளாகத்திற்குள் வந்துவிட்டது என்று கூறி அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அவர் வளாகத்திற்கு விரைந்து கொண்டிருப்பதாகவும் அங்கு நடக்கும் தகவல்களை உடனுக்குடன் எனக்குத் தெரிவிப்பதாகவும் கூறினார்.

இதற்குப் பின்னர் நான் தொலைபேசியில் என்னுடைய வழக்கறிஞர் நண்பர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டபோது, அவர் நானோ அல்லது என் மனைவியோ வீட்டைப் பரிசோதிப்பது நல்லது; ஏனெனில் வீட்டைப் பரிசோதிப்பது என்ற பெயரில் போலீஸ் எதையாவதை வைத்து விடும் சாத்தியம் உண்டு என்றும் இந்தச் சோதனை தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளிக்கவும் ஆலோசனை கூறினார். அவர் கூறிய ஆலோசனைப்படி என் மனைவியை கோவா போலீசிடம் சென்று புகார் அளிக்குமாறு கூறினேன்.

நான் மும்பையில் சில வேலைகளை முடிக்க வேண்டியிருந்ததால் கோவா செல்ல முடியவில்லை. நான் கூறியபடி என் மனைவி கோவாவிற்குச் சென்று அங்குள்ள வழக்கறிஞர் நண்பரைக் அழைத்துக் கொண்டு போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
பின்னர் நடந்த நிகழ்வுகளை என்னுடன் பணிபுரிந்த பேராசிரியர் அஜித் பாருலேகரிடமும் அண்டை வீட்டாரிடமும் விசாரித்தேன். அவர்கள், இயக்குநர் வந்தால்தான் வீட்டுச் சாவியைத் தர முடியும் என்று எவ்வளவோ கூறியும் அதைக் கேட்க போலீஸ் தயாரில்லை; காவலாளியை மிரட்டி சாவியை வாங்கி வீட்டைத் திறந்து உள்ளே சென்றுள்ளனர் எனத் தெரிவித்தனர். இதற்கு மேல் அவர்களுக்குத் தெரியவில்லை.

இதன் பின்னர் அங்கு சென்றிருந்த என் மனைவி நடந்ததை விவரித்தார்.
போலீசார் ஒரு போலீஸ் வேனுடன் இரு வாகனங்களில் ஒரு படையுடன் வந்துள்ளனர். வந்தவுடன் வாசலில் இருந்தவர்கள் உள்ளிட்ட அனைவரின் செல்போன்களையும் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் சோதனையிடுவதற்கு அதிகாரமிருப்பதாக மிரட்டி சாவியை வாங்கிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவங்கள் தெளிவாக ஒன்றை காட்டுகின்றன. என்னைப் பெரிய தீவிரவாதியைப் போன்று சித்தரித்து என்னையும் என் குடும்பத்தாரையும் அருகிலுள்ளவர்களையும் பீதியூட்டவும் திட்டமிட்டு இந்தச் சோதனைகளை நடத்தியுள்ளனர். என்னைக் குற்றவாளியாகவும் பயங்கரவாதியாகவும் காட்டி அண்டை வீட்டாரை மிரட்டவே இந்தச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.

நான் ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் படித்த சிறந்த மாணவர்களில் ஒருவன். சைபர்நெட்டிக்சில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளேன். இது தவிர ஏராளமான ஆய்வுத்தாள்களைப் புகழ்பெற்ற ஆய்விதழ்களில் பதிப்பித்துள்ளேன். நீதியுள்ள ஒரு சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதற்காக மாணவப் பருவத்திலிருந்தே பல இயக்கங்களில் பணி புரிந்துள்ளேன். அந்த இயக்கங்கள் எவையும் வன்முறையில் நம்பிக்கை கொண்ட இயக்கங்கள் அல்ல. மாவோயிஸ்ட்டுகளை விமர்சித்து கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியுள்ளேன். ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும், அம்பேத்கரின் இந்தியா மற்றும் கம்யூனிசம் போன்ற நூல்களை எழுதியுள்ளேன். இவற்றில் பல இயக்கங்களின் நடைமுறைகளை நியாயமான முறையில் விமர்சித்துள்ளேன்.

அரசின் தற்போதைய நடவடிக்கை என்னைப் போன்ற அப்பாவிகளையும் அறிவுஜீவிகளையும் அடக்குமுறையின் மூலம் மௌனிக்க வைக்கும் முயற்சியே ஆகும். நீதித்துறை என்னைப்போன்ற அப்பாவிகளைத் துன்புறுத்துவதையும் சித்ரவதை செய்வதையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும்.

முனைவர் ஆனந்த் டெல்டும்டே இந்தியாவின் சிறந்த அறிஞர்களில் ஒருவர். ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதிய இவரை மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையவர் என்றும் வன்முறைக்குத் தூண்டினார் என்றும் கூறி அவரது வீட்டில் அதிரடிச்சோதனைகளை போலீசார் நடத்தியுள்ளனர். அதைக் கண்டித்து அவர் பத்திரிகைகளுக்கு விடுத்துள்ள அறிக்கைலிருந்து…

தமிழில் சுருக்கி : சேது

Leave a Reply

You must be logged in to post a comment.