ஈரோடு:
தமிழகத்தில் 57 ஆயிரம் அரசுப் பள்ளிகளில், தனியார் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் .

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நாதிப்பாளையம் மற்றும் கொளப்பலூர் ஆகிய ஊராட்சிகளில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ரூ.54 கோடி மதிப்பில், அந்தப் பகுதியில் புதிதாக அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்படுகிறது. தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், புதனன்று (ஆகஸ்ட் 29) இந்த கட்டடப் பணிக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

நம்பியூர், எலத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு, அரசுப் பள்ளி விழாவொன்றில் செங்கோட்டையன் கலந்துகொண்டார். அப்போது, அரசுப் பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்கள், அவர்கள் படித்த பள்ளிகளுக்கு உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து, பலரும் அரசுப் பள்ளிகளுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர். இதனை, அவர் தன் பேச்சில் குறிப்பிட்டார்.

“தமிழகத்தில் உள்ள 57,000 அரசுப் பள்ளிகளில் தனியாருக்கு இணையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 22 ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மத்திய அரசின் நல்லாசிரியர் விருது, இந்தாண்டு தமிழகத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியருக்கு மட்டும் கிடைத்திருக்கிறது. நல்லாசிரியர் விருது வழங்குவதில் மீண்டும் பழைய முறையைப் பின்பற்ற வேண்டும். 22 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது” என்று செங்கோட்டையன் தெரிவித்தார் .

Leave A Reply

%d bloggers like this: