தீக்கதிர்

100 நாள் வேலைதிட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்கிடுக விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்,
100 நாள் வேலைதிட்டத்தில் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்கிடக்கோரி தொப்பபட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், தொப்பபட்டி ஊராட்சியில் நூறுநாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலைக்கான அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் முழுமையாக வேலை வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் பசுமை வீடு கட்டித் தர வேண்டும். தனிநபர் கழிப்பிடம் கட்டுவதற்கான மானியத் தொகையை உடனே வழங்க வேண்டும். மேலும், முதியோர் ஓய்வூதியத்தை தடையின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமகிரிபேட்டை தொப்பபட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கிளைத் தலைவர் லட்சுமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வி.பி சபாபதி, ஒன்றியப் பொருளாளர் குப்பண்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 75க்கும் மேற்பட்டோர் கலந்த கொண்டனர். முடிவில், துணை வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கப்பட்டது.