தீக்கதிர்

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு நாளை 100வது நாள்…!

தூத்துக்குடி;
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த மே மாதம் 22 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடைபெற்று வியாழக்கிழமையுடன் நூறாவது நாளாகிறது. இதையொட்டி தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாதா கோவில் தெரு, லயன்ஸ் டவுண் உள்ளிட்ட துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினர் வசிக்கும் பகுதிகள் உட்பட பல்வேறு முக்கிய இடங்களில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. முரளி ரம்பா உத்தரவின் பேரில், டிஎஸ்பி பிரகாஷ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், ‘முன்னெச்சரிக்கை’ நடவடிக்கையாக தென்பாகம் காவல் நிலையம் அருகே வஜ்ரா வாகனம், வருண், அதிரடிப்படை வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.