தீக்கதிர்

ஸ்டெர்லைட் ஆய்வு சிறப்புக்குழுவில் முன்னாள் அதிகாரி இணைந்து பணியாற்ற முடியுமா? உயர்நீதிமன்றம் கேள்வி…!

மதுரை;
ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொள்ளவுள்ள சிறப்புக்குழுவில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் அதிகாரி நசிமுதீன் இணைந்து பணியாற்ற முடியுமா? என்று தமிழக அரசிடம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழ்நாடு சுற்றுச்சூழல்துறை செயலாளராகவும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராகவும் பணியாற்றி வந்த அதிகாரி நசிமுதீன் சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேசன், சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் புதனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யவுள்ள சிறப்புக்குழுவில் முன்னாள் அதிகாரி நசிமுதீன் இணைந்து பணியாற்ற முடியுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பி, இதுகுறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். இந்த வழக்கு செப்டம்பர் 3-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.