புதுதில்லி;
பீமா கோரேகான் வன்முறை தொடர்பான வழக்கிற்காக என்ற பெயரில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடதுசாரி மற்றும் தலித் சிந்தனையாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்களை குறி வைத்து கடுமையான சோதனை நடத்தி, ஐந்து பேரை புனே காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் நாடு முழுவதும் கடும் கண்டனக்குரல்களை எழுப்பியுள்ளது.
இந்நிலையில் ஐந்து பேரையும் செப்டம்பர் 6 வரை வீட்டுக்காவலில் மட்டுமே
வைக்க வேண்டும்; சிறையில் அடைக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு ள்ளது.

மேலும், மாற்றுக்குரல் எழுப்புவது என்பது ஜனநாயகத்தின் பாதுகாப்பு கவசம் என்பதை அரசு உணர வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது.மகாராஷ்டிராவில் உள்ள பீமா கோரேகான் கிராமத்தில் உள்ள நினைவுச் சின்னத்தில் தலித் மக்கள் 2018 ஜனவரி 1 அன்று அஞ்சலி செலுத்துவதற்காக பல்லாயிரக்கணக்கில் கூடினர். இந்தக் கூட்டத்தில்
சங் பரிவார கும்பல்களைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டு வன்முறையை அரங்கேற்றி பெரும் கலவரமாக மாற்றினர். இதுதொடர் பான வழக்கில் புனே காவல்துறை இடது சாரிகள் மற்றும் தலித் அமைப்புகளைச் சேர்ந்த சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், அறிவுஜீவிகளை குறிவைத்து வேட்டையாடி வருகிறது.

குறிப்பாக ஜனவரி 1 சம்பவத் திற்கு, அதற்கு முன்னதாக டிசம்பர் 31 அன்று எல்கர் பரிசத் என்ற பெயரில் சில  செயற்பாட்டாளர்கள் நடத்திய கூட்டம்தான் காரணம் என்று கூறி, ஆகஸ்ட் 28 செவ்வாயன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடதுசாரி மற்றும் தலித் செயற்பாட்டாளர் களை குறி வைத்து புனே காவல்துறையினர் சோதனை நடத்தினர். அதன் முடிவில் ஹைதராபாத்தில் இடதுசாரி கவிஞர் வரவரராவ்,மும்பையில் மனித உரிமை செயற்பாட்டா ளர்கள் வெர்னான் கன்சால்வஸ் மற்றும் அருண் பெரைரா, பரிதாபாத்தில் தொழிற் சங்கவாதியும் வழக்கறிஞருமான சுதா பரத்வாஜ் மற்றும் தில்லியில் மனிதஉரிமை போராளி கவுதம் நவலகா ஆகிய ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.

காவல்துறையின் இந்த அராஜக செயலுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனக்  குரல் எழுந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம்
யெச்சூரி, “பீமா கோரேகானில் தலித் மக்களுக்கு எதிராக கொடிய வன்முறை ஏவப்பட்டது முதல் மகாராஷ்டிரா காவல்துறை யும், மத்திய காவல் மற்றும் புலனாய்வு அமைப்பு
களும், தலித் மற்றும் இடதுசாரி செயற்பாட்டா ளர்களையும் வழக்கறிஞர்களையும் குறி வைத்து வேட்டையாடி வருகிறது; இது ஜனநாயக உரிமைகள் மற்றும் குடிமை உரிமைகள் மீது தொடுக்கப்பட்டுள்ள கடுமை யான தாக்குதலாகும்” என்று சாடியுள்ளார்.

உச்சநீதிமன்றம் உத்தரவு
இந்நிலையில் மேற்கண்ட ஐந்து பேரை யும் சிறையில் அடைக்கக்கூடாது என்றும் அவர்
களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தி இந்தியாவின்
தலைசிறந்த வரலாற்றியல் அறிஞர் பேரா சிரியர் ரொமிலா தாப்பர், பொருளாதார அறிஞர் பேராசிரியர் பிரபாத் பட்நாயக் மற்றும் தேவிகா ஜெயின் ஆகியோர் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர் மற்றும் டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு செப்டம்பர் 6 வரை ஐந்து பேரையும் அவரவர் இல்லத்தில் போலீஸ் கண்காணிப்புடன் கூடிய காவலில் வைக்குமாறு உத்தரவிட்டது.
“மாற்றுக்கருத்தை வெளிப்படுத்துவது என்பது ஜனநாயகத்தின் பாதுகாப்புக் கவசமாகும்; இத்தகைய பாதுகாப்பு கவசங்களை நீங்கள் அனுமதிக்கவில்லை என்றால்,
ஜனநாயகமே வெடித்துச் சிதறிவிடும்” என்று மத்திய அரசுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்தப் பிரச்சனையில் மகாராஷ்டிரா காவல்துறை நடந்துகொண்ட விதம் குறித்தும் அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர். குறிப்பாக பீமா கோரேகான் சம்பவம் நடந்து 9 மாதங்கள் கழித்து 5 பேரைகுறி வைத்து, கைது செய்ய வேண்டிய அவ சியம் என்ன என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

இடதுசாரி, தலித் செயற்பாட்டாளர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தை பல்வேறு அரசியல் தலைவர்கள் வன்மை யாகக் கண்டித்துள்ளனர். ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ், எல்லோரை யும் மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்புடை யவர்கள் என்று கூறி கைது செய்வதும், மாற்றுக் குரலை ஒடுக்குவதும், இந்த நாடு ஒரு எதேச்சதிகார ஆட்சியை நோக்கியே சென்றுகொண்டிருக்கிறது என்பதையே வெளிப்படுத்துகிறது எனச் சாடியுள்ளார்.

பரிபா பகுஜன் மகா சங் அமைப்பின் தலைவரும், அண்ணல் அம்பேத்கரின் பேரனு
மான பிரகாஷ் அம்பேத்கர், “வெகுமக்களின் குரல்களை ஒடுக்குவதற்கு நடக்கும் இந்த முயற்சி, ஜனநாயகத்தை அழித்துவிடும். இப்போது கைது செய்யப்பட்டிருப்பவர்கள் தேர்தலில் நிற்கப்போவதில்லை. அவர்களின் ஒரே நோக்கம் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாப்பது மட்டும் தான். ஆனால் அதையே அரசால் சகித்துக்
கொள்ள முடியவில்லை என்று கண்டித்துள்ளார்.

“விவசாயிகள், தொழிலாளிகள் மற்றும் வெகுமக்கள் மத்தியில் மத்திய அரசு நாளுக்கு நாள் தனது பிடியை இழந்து வருகிறது. இதனால் ஏற்பட்ட அச்சத்தின் விளைவாகவே இடதுசாரிகள் மற்றும் தலித் போரா ளிகள் மீது அடக்குமுறையை ஏவியுள்ளது” என்று பொருளாதார அறிஞர் பேராசிரியர் பிரபாத் பட்நாயக் கண்டித்துள்ளார்.

சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டனம்
மேற்கண்ட ஐந்து செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடதுசாரி அறிவுஜீவிகள் மற்றும் மனித உரிமை போராளி
களின் வீடுகளில் புகுந்து அராஜகமாக சோதனை நடத்தியிருப்பதை கடுமையாக கண்டி த்துள்ளது. அவர்களது இல்லங்களிலிருந்து லேப்டாப்கள், செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களையும் ஆவணங்களையும் பறிமுதல் செய்திருப்பதை சுட்டிக் காட்டியுள்ள அரசியல் தலைமைக்குழு, இதுபோன்ற தேடுதல் வேட்டையும் கைதும் ஜனநாயக உரிமைகள் மற்றும் குடிமை உரிமை கள் மீதான கடுமையான தாக்குதலாகும் என சாடியுள்ளது.

பீமா கோரேகானில் தலித் மக்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு அதுதொடர்பான வழக்குகளை எடுத்து நடத்துகிற தலித் உரிமை போராளிகள் மற்றும் வழக்கறிஞர்களை குறி வைத்து மகாராஷ்டிரா காவல்துறையும் மத்திய அரசின் காவல் மற்றும் விசாரணை அமைப்புகளும் தாக்குதலை ஏவியுள்ளன; ஈவிரக்கமற்ற ‘உபா’ சட்டத்தின்கீழ் பொய் வழக்குகளை பதிவு செய்துள்ளன எனக் குறிப்பிட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு, கைது செய்யப்பட்ட போராளிகள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்; வழக்குகளை முற்றாக வாபஸ் பெறவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. சிஐடியு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும் இதை வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.