கோவை,
ரயிலில் அடிப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.

கோவை ரயில் நிலையத்தில் ரயிலில் அடிப்பட்டு பயணிகள் இறப்பதை தடுப்பதுகுறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாயன்று நடைபெற்றது. இதில் ரயில்வே கால்துறை துணை கண்காணிப்பாளர் வெற்றிவேந்தன் முன்னிலை வகித்தார். தமிழக ரயில்வே கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு பங்கேற்று ரயில் விபத்துகளை தவிர்ப்பது மற்றும் பாதுகாப்பான ரயில் பயணம் குறித்த விழிப்புணர்வு நாடகத்தை துவக்கி வைத்தார். இதன்பின்னர் அவர் கூறியதாவது: கவனக்குறைவு காரணமாக தான் ரயிலில் அடிப்பட்டு இறக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தண்டவாளத்தை கடக்கும் போது ஏற்படும் உயிரிழப்புஅதிகமாக உள்ளது. காதில் இயர்போன் மாட்டி செல்வது, ரயில் படிக்கட்டில் அமர்ந்தபடி செல்வது, ஓடும் ரயிலில் ஏறுவது, இறங்குவது மற்றும் ரயிலில் தொங்கியபடி செல்வது போன்ற காரணத்தினால் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகிறது. அதன்படி, கடந்த ஆண்டில் மட்டும் 2 ஆயித்து 300 பேர் ரயிலில் அடிப்பட்டு இறந்துள்ளனர்.

மேலும், இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழகத்தில் உள்ள 46 முக்கிய ரயில் நிலையங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. ரயிலில் பயணம் செய்யும் போது பாதுகாப்புடன் பயணம் செய்ய வேண்டும். ஜன்னல் ஓரத்தில் அதிக நகை அணிந்து பயணிக்க கூடாது. பயணிகள் கொண்டு செல்லும் பொருட்களை பத்திரமாக வைத்து கொள்ள வேண்டும். ரயிலில் செல்லும் போது முன் பின் தெரியாத நபர்கள் கொடுக்கும் எந்தவித பொருட்களையும் வாங்கி சாப்பிடக்கூடாது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்புஅளித்தால் ரயிலில் திருட்டு சம்பவங்களை எளிதாக தடுக்க முடியும். தற்போது ரயில் முன்புறம் நின்று செல்பி எடுப்பது, ஜன்னலில் இருந்து வெளியில் தலையை நீட்டி செல்பி எடுப்பது போன்றவை அதிகரித்துள்ளது. இதனால் கூட அதிகளவு உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இவ்வாறு ரயில் வரும்போது செல்பி எடுத்த 112 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: