திருச்சி:
முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் மேலும் சில மதகுகளில் விரிசல் மற்றும் அணையின் அடித்தளம் பிளாட்பாரத்தில் விரிசல் இருப்பதாக நீரில் மூழ்கி ஆய்வு செய்த நீச்சல் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் கடந்த 22-ந்தேதி இரவு 9 மதகுகள் உடைந்தன. அதனை தற்காலிகமாக சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மதகுகளை அடைக்க மணல் நிரப்பிய 2½ லட்சம் சாக்கு மூட்டைகள் தயார் செய்யப்பட்டன. அணையின் முதலாவது மதகு முதல் 17-வது மதகு வரை, 220 மீட்டர் தூரத்துக்கு மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நடந்து வருகிறது இதுவரை 1.25 லட்சம் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ளது. இப்பணியில் 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் அணையில் இடிந்த 9 மதகுகள் மட்டுமின்றி மீதமுள்ள 36 மதகுகளும் நல்ல நிலையில் உள்ளதா என்றும், கொள்ளிடம் அணையின் உறுதித் தன்மை குறித்தும் ஆய்வு செய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவெடுத்தனர்.

இதற்காக, தண்ணீருக்கு அடியில் சென்று அணையின் மதகுகளில் விரிசல் உள்ளதா; அணையின் பிளாட்பாரம் விரிசல்விடாமல் இருக்கிறதா என கண்டறிவதற்காக ஆழ்கடலில் மூழ்கி நீச்சல் பயிற்சி அனுபவம் உள்ள ‘ஹைடெக்’ சிவில் என்ஜினீயர்ஸ் ஏஜென்சியினர் தூத்துக்குடியில் இருந்து வரவழைக்கப்பட்டனர்.

அவர்களில், ஆழ்கடலில் மூழ்கி முத்து மற்றும் சிப்பிகளை சேகரிக்கும் அனுபவம் உள்ள நீச்சல் பயிற்சியாளர்கள் பாலு (வயது56), சிவா (40), சந்தனகுமார் (40) ஆகிய 3 பேரும் முக்கொம்பு கொள்ளிடம் அணைக்கு வந்தனர்.

அவர்கள் தண்ணீரில் மூழ்கி அணையின் ஒவ்வொரு மதகையும் ஆய்வு செய்தனர். தூண்கள், மதகுகள் மற்றும் அணையின் உறுதித்தன்மை குறித்து உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் தண்ணீரில் மூழ்கி ஆய்வு நடத்தினர். அப்போது, கொள்ளிடம் அணையில் உள்ள எஞ்சிய மதகுகள் சிலவற்றில் விரிசல் ஏற்பட்டு இருப்பதும், அணையின் அடித்தள பிளாட்பாரத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பதும் கண்டறியப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்துள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதனை சீரமைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும் சில மதகுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் எஞ்சிய அணைப் பகுதியும் இடிந்து விழும் அபாயம் உள்ளதாக அஞ்சப்படுகிறது.

இதனிடையே காவிரி ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகரிப்பு, திருச்சியில் பெய்த மழை ஆகியவற்றால் கொள்ளிடம் அணையில் தற்காலிக சீரமைப்பு பணி பாதிக்கப்பட்டது.
காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வந்தால் வெள்ள பாதிப்பை தடுப்பதற்காக கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.