திருப்பூர்,
மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டில் வேலைவாய்ப்பை உறுதிசெய்ய வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் சங்க மாநிலத் தலைவர் ஜான்சி ராணி வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 3 ஆவது மாநில மாநாடு செப்.2 முதல் 4 ஆம் தேதி வரை திருப்பூரில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இம்மாநாட்டின் நோக்கங்கள் குறித்து செவ்வாயன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜான்சி ராணி கூறுகையில்,“ மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய சட்டம் கடந்த 2016 ஆம் ஆண்டு நிறைவேற்றப் பட்டது. ஆனால் இதுவரை மாநில அரசு அதனை நிறைவேற்றவில்லை” என்றார். மாற்றுத்திறனாளிகளுக்கு உயர் கல்வியில் 4 விழுக்காடும், வேலைவாய்ப்பில் 5 விழுக்காடும் இடஒதுக்கீடு இருக்கிறது. ஆனால், இந்த நடைமுறையை ஆளும் அரசுகள் அமல்படுத்துவதில்லை. ஆகவே, அரசின் எந்த துறைகளில், எவ்வளவு காலிப் பணியிடங்கள் உள்ளது என்பதை கண்டறிந்து இடஒதுக்கீட்டின் படி மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்க வேண்டும். உதவித்தொகை பெறும் நடைமுறைகளை எளிதாக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் வழங்குவது போல் குறைந்தபட்ச உதவித்தொகையாக ரூ.3 ஆயிரம் மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள (80 சதவிகிதம்) மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகையாக வழங்க வேண்டும்.  மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய பல்நோக்கு அடையாள அட்டை ஆன்லைனில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அதை பெறுவதற்கு கடுமையாக முயன்றும் கிடைப்பதில்லை. இது போன்று மாற்றுத் திறனாளிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து இம் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது என்றும் ஜான்சிராணி தெரிவித்தார். இம்மாநாட்டில் மாநிலம் முழுவதுதிலும் இருந்து 450க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டையொட்டி செப்.2 ஆம் தேதியன்று நடைபெறும் பேரணியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ள உள்ளனர். அன்றைய தினம் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய மேடையின் தலைவர் முரளிதரன் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது சங்கத்தின் மாநிலச் செயலாளர் நம்புராஜன், மாவட்டத் தலைவர் ஜெயபால், செயலாளர் ராஜேஸ், வரவேற்புக்குழுத் தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.