ஈரோடு,
பொது விநியோக திட்டத்தில் வழங்குவதற்காக கர்நாடகாவிலிருந்து 1350 டன் சர்க்கரை ஈரோடு மாவட்டத்திற்கு ரயிலில் கொண்டு வரப்பட்டது.

பொது விநியோக திட்டத்தின் கீழ் பல்வேறு மாநிலங்களில் இருந்து உணவு பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு ஈரோட்டில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்படும். பின்னர் அந்த பொருட்கள் மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும். இந்த நிலையில் பொது வினியோக திட்டத்தின் சார்பில், ஈரோடு மாவட்டத்திற்கு தேவையான சர்க்கரையை கர்நாடக மாநிலம், பிலகவி மாவட்டம் நவலிகால் பகுதியில் உள்ள அதானி சர்க்கரை நிறுவனத்தில் இருந்து கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அங்கு 1350 டன் சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு ரயில் மூலம் ஈரோட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்த ரயில் புதனன்று காலை ஈரோடு ரயில் நிலையத்தை வந்தடைந்தது. இதில் 23 பெட்டிகளில் கொண்டு வரப்பட்ட 1350 டன் சர்க்கரையை தொழிலாளர்கள் ரயிலில் இருந்து இறக்கி லாரிகளில் ஏற்றி ஈரோடு மூலப்பாளையம் மற்றும் பவானி ரோட்டில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு சென்றனர். இந்த சேமிப்பு கிடங்குகளில் இருந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளுக்கு சர்க்கரை எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.