ஈரோடு,
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.2.60 கோடி மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்கள் புதனன்று கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. கேரள மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகத்தின் 20 மாவட்டங்களில் பெறப்பட்ட ரூ.2.60 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் அடங்கிய 30 லாரிகள் புதனன்று ஈரோடு மாவட்டம், சித்தோடு, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டது. இதனை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.

இதன்பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கனமழையினால் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்திற்கு தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையின் மூலம் 20 மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட ரூ.2 கோடியே 60 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் 30 கன்டெய்னர் லாரிகள் மூலம் கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டத்திற்கு தற்போது அனுப்பிவைக்கப்பட்டது. மேலும், வருகின்ற செப்.7 ஆம் தேதியன்று தென் மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட ரூ.1.40 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் 20 கன்டெய்னர் லாரிகள் மூலம் திருவனந்தபுரம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.