திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (நீட்ஸ்) செயல்படும் தொழில் நிறுவனத்தினை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பல்லடம் வட்டம் மங்கலம் சாலை அரசங்காடு பகுதியில் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில்நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (நீட்ஸ்) சார்பில் கடனுதவி பெற்று செயல்படும் தொழில் நிறுவனத்தை அவர் நேரில் சென்று பார்வையிட்டார்.  நீட்ஸ் திட்டத்தின் மூலம் 25 சதவிகிதம் மானியத்துடன் ரூ.10 இலட்சம் முதல் ரூ.5 கோடி வரை முதலீட்டில் தொழில் துவங்க கடனுதவிகள் வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 6 வருடங்களாக இத்திட்டத்தின் மூலம் 214 பயனாளிகளுக்கு ரூ.40.06 கோடி மானியத்துடன் கூடிய ரூ.171.48 கோடி முதலீட்டில் தொழில் நிறுவனங்கள் துவங்குவதற்கு கடனுதவிகள் வழங்கப்பட்டு உள்ளது.

அரசங்காடு பகுதியில் அமைந்துள்ள நாடா இல்லாத தறி நிறுவனம் அமைக்க வங்கிக் கடனுதவி ரூ.99.50 இலட்சம் பெற்று அதற்கு அரசு மானியமாக ரூ.23.83 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் வங்கிக்கு முறையாக கடனை திருப்பி செலுத்தியதற்காக இத்தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ.2.32 இலட்சம் பின்முனை வட்டி மானியமாக தமிழக அரசு வழங்கியுள்ளது என்று ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி கூறினார்.  இந்தஆய்வின் போது மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கண்ணன், திட்ட அலுவலர் திருமுருகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எஸ்.சுந்தரமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: