===பேராசிரியர் கே. ராஜு===
சாப்பாட்டு ராமன்கள் என்று சிலரை நாம் கேலி பேசலாம். ஆனால் பெங்களூரு சஞ்சய்நகர் எனும் குடியிருப்புப் பகுதியின் அருகே சாட் தெரு என்று அழைப்படும் ஒரு தெரு அவர்களுக்காகவே உருவானது. மாநகரத்தில் உள்ள உணவுப்பிரியர்களை அது ஈர்த்துக் குவித்துவிடுகிறது. சாட்-மோமோ அய்டம்கள், இட்லி, பரோட்டாக்கள், விதவிதமான பெயர்களில் வலம்வரும் தோசைகள் போன்ற நாவை ஏங்கவைக்கும் உணவுப் பொருட்களை சாமானிய மனிதர்களுக்கு விற்று அவர்களை பரவசப்படுத்தும் 10,15 கடைகள் அங்கே டேரா போடுகின்றன.தமிழகத்திலும் இப்படி சாலையோரக் கடைகளில் நின்று சமோசா, வடை, பஜ்ஜி போன்ற வகைகளை உள்ளே தள்ளி திருப்தியோடு விடைபெறும் ஏராளமான மனிதர்களை நாம் அன்றாடம் பார்க்கிறோம். இம்மாதிரி சாலையோரக் கடைகளில் உள்ள மிகப் பெரிய பிரச்சனை அங்கு கிடைக்கும் பொருட்கள் சுத்தமானவையா, அவை சற்றுமுன் தயாரிக்கப்பட்டவையா அல்லது முந்தைய தின தயாரிப்பில் மீந்துபோனவையா என்பதுதான். இதற்கு ஆகார்ஷ் ஷாமனுர் என்ற கட்டடவியலாளர் “கம்யூனிட்டி ரிஃப்ரெஜெரேஷன்” என்ற ஒரு தீர்வை முன்வைக்கிறார். இந்திய அறிவியல் கழகமும் (ஐஐஎஸ்சி) விற்பனைப் பொருட்களை வடிவமைக்கும் மையம் என்ற லாபநோக்கில்லாத அறக்கட்டளையும் இணைந்து கடந்த வருடம் நடத்திய ஒரு கண்காட்சியில் ஷாமனுர் இந்த பரிந்துரையை முன்வைத்து 50,000 ரூபாய் பரிசைத் தட்டிச் சென்றார்.

தற்போது சிட்டிசன்ஸ் ஃபார் சஸ்டைனபிலிட்டி என்ற குடிமக்கள் குழுவுடன் இணைந்து சஞ்சய்நகரில் ஒரு முன்னோடித் திட்டத்தைத் தொடங்கியுள்ளார். தோசை, இட்லி, வடை, பரோட்டா விற்கும் நான்கு சாலையோரக் கடைக்காரர்களுக்கு அவர் மினிஃப்ரிட்ஜ் ஒன்றினைத் தயாரித்துக் கொடுத்திருக்கிறார். கெட்டுப் போகக் கூடிய சட்னி, இட்லி-தோசை மாவு போன்ற பொருட்களை அவர்கள் ஃப்ரிட்ஜில் வைத்துப் பாதுகாத்து கெடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். கடைகளுக்கு அருகில் உள்ள தள்ளுவண்டியில் மினிஃப்ரிட்ஜ் வைக்கப்படுகிறது.“கடந்த ஆகஸ்ட் 4 அன்று இத்திட்டத்தைத் தொடங்கினோம். அதற்கு முன்னதாக, கடைக்காரர்களிடமும் வாடிக்கையாளர்களிடமும் பேசினோம். இட்லி, தோசை, பரோட்டாவுடன் தொட்டுக் கொள்ள உதவும் சட்னியும் சில உணவுப் பொருட்களும் விரைவில் கெட்டுப் போய்விடுகின்றன என்றார்கள். ஃப்ரிட்ஜைப் பயன்படுத்தலாம் என்ற யோசனையை கடைக்காரர்கள் உடனே ஏற்றுக் கொண்டார்கள்” என்கிறார் ஷாமனுர்.

“ஃப்ரிட்ஜ் வைக்கப்பட்டுள்ள வண்டி மாலை 4 மணியிலிருந்து இரவு மணி வரை மட்டுமே தரப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு உடனுக்குடன் உணவுப் பொருட்களைத் தரவேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். இந்த முன்னோடித் திட்டத்தை சில நாட்களுக்கு பரிசோதிப்போம். வெற்றிகரமாக நிறைவேறினால், தற்போது மின்னாற்றலில் இயங்கும் ஃப்ரிட்ஜினை சூரிய சக்தியில் இயங்கக் கூடியதாக மாற்றியமைப்போம். சாலையோர உணவுக் கடைகள் அதிகமாக உள்ள மற்றும் பல இடங்களுக்கும் இந்த முன்னோடித் திட்டத்தை விரிவுபடுத்துவதாக இருக்கிறோம்” என்று அவர் சொல்கிறார் கண்களில் மின்னும் நம்பிக்கையுடன் .

கொதிக்கும் பூமியாக மாறும் ஆபத்து                                                                                                                                        2015-ஆம் ஆண்டில் ஏறக்குறைய 200 நாடுகள் கூடி பூமியின் வெப்பநிலை உயர்வு தொழிற்புரட்சிக்கு முந்தைய நிலையைவிட 2 டிகிரி சென்டிகிரேடுக்கு மேல் போகாமல் பார்த்துக் கொள்வதென முடிவு செய்தன. ஆனால் தற்போது அப்படி உலக நாடுகள் இலக்கை நிறைவேற்றினாலும் கூட உலக சராசரி வெப்பநிலை 4.5 டிகிரி சென்டிகிரேட் கூடுதலாகி பூமியை கொதிக்கும் பூமியாக மாறும் ஆபத்து இருக்கிறது என் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். பனிக்கட்டிகள் உருகுவது, கடல் பரப்பிலிருந்து மீத்தேன் ஹைட்ரேட்டுகள் இழப்பு, நிலத்திலும் கடலிலும் உள்ள கார்பன் சேகரிப்பு பலவீனமடைதல் போன்ற பல்வேறு திடீர் மாற்றங்களை பூமி சந்திக்க வேண்டியிருக்கும் என்ற அவர்களது எச்சரிக்கை நம் வயிற்றில் புளியைக் கரைக்கிறது. விஞ்ஞானிகள் தீர்வை பரிந்துரைத்தாலும் அமெரிக்கா போன்ற அடாவடித்தனம் செய்யும் நாடுகள் தங்களது கார்பன் வெளியீடுகளைக் குறைத்து உலகைக் காப்பாற்ற முன்வரவேண்டுமே?

Leave a Reply

You must be logged in to post a comment.