ஹைதராபாத்:
மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், பிரதமர் மோடியைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகவும் கூறி, நாடறிந்த தலித் உரிமைச் செயற்பாட்டாளர்கள், இடதுசாரி சிந்தனையாளர்கள் 5 பேரை, மகாராஷ்டிர மாநில பாஜக காவல்துறை கைது செய்துள்ளது.

இவர்கள் மீது, பயங்கரவாத ஒழிப்புச் சட்டம் மட்டுமன்றி, “சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (Unlawful Activities Prevention Act) என்ற கொடூரமான அடக்குமுறைச் சட்டத்தையும் மகாராஷ்டிர காவல்துறை ஏவியுள்ளது.

இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சிந்தனையாளர்கள் மீதான இந்த அடக்குமுறையை, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அறிவுஜீவிகள், வரலாற்று அறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் கண்டித்துள்ளனர். கைது செய்யப்பட்ட எழுத்தாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

பீமா கோரேகான் நினைவுதினம்
பிரிட்டிஷ் ராணுவத்தில் 800 பேர் என்ற அளவிற்கே இருந்த தலித்துக்கள் (மஹர்), 28 ஆயிரம் பேர்களைக் கொண்ட பிராமணிய பேஷ்வா படையினருக்கு எதிராக 1817-ஆம் ஆண்டு சண்டையிட்டனர். இதில், பிராமணிய பேஷ்வாக்கள் என்ற அரச பரம்பரையினர் தோற்கடிப்பட்டனர். தலித்துக்களான மஹர்கள் தீரமிக்க வெற்றியைப் பெற்றனர்.

அப்போது முதல், பேஷ்வாக்களுக்கு எதிரான யுத்தத்தை நினைவுகூர்ந்து வரும் தலித் மக்கள், இந்த யுத்தத்தில் உயிரிழந்த தலித் வீரர்களுக்கு அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர். தலித்துக்களைப் பொறுத்தவரை இந்த யுத்தம் பிரிட்டிஷாருக்கு ஆதரவானது அல்ல; பேஷ்வாக்கள் ஆட்சியில் தாங்கள் அனுபவிக்கும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு கொடுக்கப்பட்ட பதிலடி என்பதாகவே பார்த்து வந்தனர். அந்த வகையில், 1927-ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கரும் பீமா கோரேகானில் உள்ள நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து தலித் மக்களும் ஒவ்வோராண்டும் அஞ்சலி செலுத்தி வந்தனர்.
இந்நிலையில், பீமா கோரேகான் வெற்றியின் 200-ஆவது ஆண்டு நினைவையொட்டி, கடந்த ஜனவரி 1-ஆம் தேதி பெரும் எண்ணிக்கையிலான தலித் மக்கள் கோரேகானில் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

சங்-பரிவாரங்கள் வன்முறை
ஆனால், இந்த விழாவை சீர்குலைக்க வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டிருந்த சாதி ஆதிக்கக் கூட்டம், ‘சமஷ்த் இந்து அகாதி’ எனும் சங்-பரிவார் கும்பலுடன் சேர்ந்து கொண்டு, தலித்துக்கள் மீது பெரும் வன்முறைத் தாக்குதலைத் தொடுத்தனர். தலித் இளைஞர் ஒருவரை படுகொலை செய்ததுடன், தலித்துக்களின் வாகனங்களையும் தீவைத்து எரித்தனர்.
ஆனால், மகாராஷ்டிர மாநில பாஜக அரசோ, பீமா கோரேகான் வன்முறைக்கு, தலித் உரிமைச் செயற்பாட்டாளர்களான சுதிர் தாவ்லே, சுரேந்தர் கட்லிங், மகேஷ் ரௌட், ஷோமா சென், ரோனா வில்சன் ஆகியோர்தான் காரணம் என்று கூறி அவர்களைக் கடந்த ஜூன் மாதம் கைது செய்தது.

திடீர் நடவடிக்கை
இந்நிலையில் ஒருமாத இடைவெளிக்குப் பின்பு, செவ்வாய்க்கிழமையன்று திடீரென தலித் உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் இடதுசாரி எழுத்தாளர்களான எழுத்தாளர் பி. வரவரராவ், கவுதம் நவ்லகா, சுதா பரத்வாஜ், வெர்னான் கன்சல்வெஸ், அருண் பெரைரா ஆகியோரையும் மகாராஷ்டிர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அதாவது, கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட ரோனா வில்சனின் இருப்பிடத்தில், பிரதமர் மோடியை கொலை செய்யத் திட்டமிட்ட மாவோஸ்ட்டுகளின் துண்டறிக்கைகள் இருந்ததாகவும், “ராஜீவ் காந்தியை கொலை செய்தது போலவே மோடியையும் கொலை செய்வோம்” என்று குறிப்பிடப்பட்டு இருந்த அந்தக் கடிதத்தில், ஹைதராபாத்தைச் சேர்ந்த இடதுசாரி எழுத்தாளர் பி. வரவர ராவின் பெயர் இருந்ததாகவும் கூறி இந்த கைது நடவடிக்கையை அவர்கள் நடத்தியுள்ளனர்.

முதலில், வரவர ராவின் மருமகனும், மூத்த பத்திரிகையாளருமான கே.வி.குர்மாநாத், புகைப்பட நிபுணர் கிராந்தி ஆகியோர் வீடுகளில் அதிரடி சோதனை ஒன்றை நடத்திய மகாராஷ்டிர போலீசார், பின்னர், வரவர ராவின் வீட்டுக்கு சென்று அவரை கைது செய்துள்ளனர்.
இதேபோல, தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட், தில்லி, கோவா, சத்தீஷ்கர் என மொத்தம் 7 மாநிலங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்திய காவல்துறையினர், ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் இடதுசாரி சிந்தனையாளரும், வழக்கறிஞருமான சுதா பரத்வாஜை கைது செய்தனர்.

மும்பையில் நடந்த சோதனையில், வெர்னன் கன்சல்வெஸ், அருண் பெரேரா ஆகியோரையும் தில்லியில் நடந்த சோதனையில் மனித உரிமை ஆர்வலர் கவுதம் நவலகா-வையும் கைது செய்தனர்.

அத்துமீறல்; லேப்டாப்- கைபேசி பறிமுதல்
மேலும், ராஞ்சியில் ஆதிவாசி குழந்தைகளுக்காக பள்ளி நடத்தும் பேராயர் ஸடான்ஸ் ஸ்வாமியின் வீடு, கோவாவில் தலித் அறிஞரும், டாக்டர் அம்பேத்கரின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருமான ஆனந்த் டெல்டும்டே மற்றும் அவரைச் சேர்ந்தவர்களின் வீடுகளில் சோதனை என்ற பெயரிலும் போலீசார் அத்துமீறியுள்ளனர்.
சுதா பரத்வாஜின் 2 லாப்டாப்கள், 2 கைபேசிகள், பென் ட்ரைவ் ஆகியவற்றை பறிமுதல் செய்த அவர்கள், சுதா பரத்வாஜின் ஜிமெயில், மற்றும் பிற சமூக வலைத்தளங்களின் பாஸ்வேர்டுகளை தருமாறு மிரட்டி, காலியான பக்கங்கள் கொண்ட டயரி ஒன்றையும் பறித்துள்ளனர்.

கைதானவர்களின் வாழ்க்கை பின்னணி
மோடியை கொலை செய்யத் திட்டமிட்டார்கள்; பீமா கோரேகான் பகுதியில் வன்முறையை தூண்டினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இந்த 5 பேரும் புகழ்பெற்ற மனித உரிமை மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள், செயற்பாட்டாளர்கள் ஆவார்கள்.

ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்ட எழுத்தாளர் பெண்டியாலா வரவர ராவ், தெலுங்கானாவைச் சேர்ந்த இடதுசாரி எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார். எழுத்தாளர் விரசாம் என்ற அசோசியனை நடத்தி வருகிறார். இவருடைய 15 கவிதைத் தொகுப்புகள் 20 இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கின்றன.

சுதா பரத்வாஜ், ஹரியானாவைச் சேர்ந்தவர். வழக்கறிஞரான இவர் தில்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். பழங்குடியினர் உரிமைகள், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான சட்டங்கள் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருபவர். சத்தீஸ்கரில் வசித்து வருகிறார்.

கௌதம் நவ்லகா, குவாலியரைச் சேர்ந்தவர். காஷ்மீர் மாநில மக்களின் மனித உரிமைகள் தொடர்ந்து பற்றி தொடர்ந்து எழுதி வருபவர். தலித் மற்றும் பழங்குடி மக்களின் நலனுக்காக கடந்த 40 வருடங்களாக குரல் கொடுத்து வருகிறார்.

அருண் பெரேரா, மும்பை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றுகிறார். பீமா கோரேகான் வழக்கில் சுதிர் தாவ்லே கைது செய்யப்பட்ட போது கடும் எதிர்ப்பை பதிவு செய்தவர். இவர் எழுதிய ‘கலர்ஸ் ஆப் த கேஜ்: ஏ ப்ரிசன் மேமோயர்’ என்ற புத்தகம் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டதாகும்.

வெர்னன் கன்சல்வெஸ், மும்பையைச் சேர்ந்த பேராசிரியர் மற்றும் எழுத்தாளர் ஆவார். மங்களூரில் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்த இவர், விதர்பா பகுதியில் இருக்கும் தொழிலாளர்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபட்டு வருபவர்.

அறிவுஜீவிகள் கண்டனம்
வரவர ராவ், சுதா பரத்வாஜ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதற்கு, சமூகச் செயல்பாட்டாளர்கள் மற்றும் அறிவுஜீவிகள் கண்டனக் கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர். “அரசின் இந்த நடவடிக்கை விளிம்புநிலையில் உள்ளோருக்காக நீதி கோருபவர்களை அச்சுறுத்தும் செயலாகும்” என்று அவர்கள் கண்டித்துள்ளனர்.

ராமச்சந்திர குஹா
“இது தலித்துகள் நலன்களுக்காக குரல் கொடுப்போர், சமூக நீதிக்காகப் போராடுபவர்கள், வழக்கறிஞர்கள், அறிவுஜீவிகள் அனைவரையும் அச்சுறுத்தும் செயலன்றி வேறல்ல” என்று கூறியுள்ள வரலாற்று அறிஞர் ராமச்சந்திர குஹா, “மகாத்மா காந்தி இன்றிருந்தால், அவரையும் கைது செய்திருப்பார்கள்” என்று சாடியுள்ளார். “பழங்குடி இனத்தவர்களின் நிலத்தை அபகரிக்க வேண்டும், கனிம வளங்களைச் சுரண்ட வேண்டும் அதற்கு இடையூறாக இருக்கும் கடைசி பிரதிநிதிகளை கைது செய்வதுதான் அவர்களுக்கு ஒரே வழி” என்றும் ராமச்சந்திர குஹா கூறியுள்ளார்.

அருந்ததி ராய்
அருந்ததி ராய், இந்திரா ஜெய்சிங் ஆகியோரும் இந்த அடக்குமுறையைக் கடுமையாக எதிர்த்துள்ளனர். “ சட்டத்தைப் பாதுகாக்க ஒருநாள் யாருமில்லாமல் போய்விடுவார்கள், ஒருநாள் பாதுகாக்க வேண்டும் என்ற சட்டமும் கூட இல்லாமல் போய் விடும்” என்று இந்திரா ஜெய்சிங் கூறியுள்ளார். “இது நெருக்கடி நிலைப் பிரகடனத்தை ஒத்த அடக்குமுறை” என்று எழுத்தாளர் அருந்ததி ராய் குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தி
“நாட்டில் ஆர்எஸ்எஸ் மட்டும் இருக்கட்டும், மற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களை எல்லாம் மூடிவிடுங்கள்.. அனைத்து மனித உரிமை ஆர்வலர்களையும், சமூக ஆர்வலர்களையும் சிறையில் தள்ளிவிடுங்கள். யார் மீதெல்லாம் புகார் இருக்கிறதோ அவர்களை சுட்டுக் கொல்லுங்கள். புதிய இந்தியாவை வரவேற்கிறோம்” என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமுஎகச கண்டனம்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு. வெங்கடேசன், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலித்துகள், பழங்குடிகள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் நலனை காப்பதிலும், மத்திய அரசின் மக்கள்விரோதத் திட்டங்களை எதிர்ப்பதிலும், சங்பரிவாரத்தின் இந்துத்வ வெறுப்பரசியலை விமர்சிப்பதிலும் முன்னணியில் இயங்கும் கவுதம் நவ்லகா, சுதா பரத்வாஜ், வெர்னான் கன்சல்வெஸ், அருண் பெரைரா, எழுத்தாளர் வரவரராவ் ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பதை கண்டிப்பதாக” குறிப்பிட்டுள்ளனர். “நாடறிந்த ஆளுமைகளான இவர்களுக்கே இந்த கதியா என்கிற பீதிக்குள், கருத்தியல் தளத்தில் இயங்குகிறவர்களை மூழ்கடித்து, சுயதணிக்கையின் மூலம் அவர்கள் தம்மைத்தாமே முடக்கிக் கொள்ளும் நிலையை உருவாக்க ஆட்சியாளர்கள் மேற்கொள்ளும் முயற்சியே இது” என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.