பெங்களூரு:
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் தேதி சந்திரயான் – 2 செயற்கைக்கோள் ஏவ திட்டமிட்டிருப்பதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் சிவன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சந்திரயான் – 2 செயற்கைக்கோளின் எடை 3 ஆயிரத்து 850 கிலோவாக உயர்த்தப்பட்டதால், ஜிஎஸ்எல்வி எம்கே – 2 ரக விண்கலத்தில் செலுத்த முடியாது எனவும், இதற்காக ஜிஎஸ்எல்வி எம்கே – 3 மறுவடிவமைப்பு செய்யப்படுவதால்தான் இந்தத் தாமதம் ஏற்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், காலநிலை ஒத்துழைக்காவிட்டால், ஜனவரி 3ஆம் தேதி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்ட சந்திரயான் – 2 பிப்ரவரி 16ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படும் எனவும் சிவன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், உலகிலேயே முதன்முறையாக சந்திரனின் தென்துருவத்தை அடைய இருக்கும் செயற்கைக்கோள் சந்திரயான் – 2 எனவும், இது 40 நாட்கள் பயணித்து தனது இலக்கான சந்திரனை அடையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.மேலும், ரூ.10,000 கோடி மதிப்பீட்டில் 2022இல் கயான் ராக்கெட் மூலம் மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்ப திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதனால், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் நான்காவது நாடு என்ற பெருமையை அடையவுள்ளது இந்தியா எனவும் சிவன் கூறினார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அவருடன் மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் உடன் இருந்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.