திருவனந்தபுரம்;
நாட்டின் முன்னணி ரப்பர் உற்பத்தி மாநிலமான கேரளாவில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் ரப்பர் உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளது.

இதுகுறித்து ரப்பர் வாரிய உறுப்பினர் ஒருவர் பிசினஸ் லைன் ஊடகத்திடம் பேசுகையில், “கேரளாவில் இந்த ஆண்டு ரப்பர் உற்பத்தி குறையும் வாய்ப்புள்ளது. குறிப்பாக மத்திய திருவாங்கூர் பகுதிகளில் பெய்த கனமழையால் ரப்பர் உற்பத்தி முடங்கியுள்ளது. ரப்பர் உற்பத்தி நிலை குறித்து ரப்பர் வாரியம் தகவல்களைச் சேகரித்துள்ளது. இந்தத் தகவல்களின்படி தயாரிக்கப்பட்ட அறிக்கை இந்த வாரத்தில் வெளியாகலாம். சந்தைக்கு வரத்து குறைந்தால் அதைச் சார்ந்த வர்த்தகமும் பாதிக்கப்படும்” என்றார்.

கேரளாவில் ரப்பர் உற்பத்தி குறைந்துள்ளது என்பதைக் கடந்த சில நாட்களாக வெளியாகி வரும் செய்திகளும் உறுதிப்படுத்துகின்றன. பல பகுதிகளில் ரப்பர் தோட்டங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளன. இம்மாதத்தின் தொடக்கத்தில் ரப்பர் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.131ஆக மட்டுமே இருந்தது. ஆனால், இப்போது கிலோ ஒன்றுக்கு ரூ.134 ஆக அதிகரித்துவிட்டது. முன்னதாக ஏப்ரல் மாதத்தில் பெய்த கனமழையாலும் சுமார் 40 நாட்கள் வரை கேரளாவில் ரப்பர் உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தது. உற்பத்தி குறைவால் தற்போது அதிகரித்து வரும் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், ரப்பர் விநியோகத்தைச் சீர்ப்படுத்தவும் மத்திய அரசு துரித நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.