திருவனந்தபுரம்;
கேரள வெள்ள நிவாரண நிதிக்கு, பாஜக சார்பில் ரூ. 25 கோடி ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது என்று பாஜக-வினர் சமூகவலைத்தளங்களில் பொய்ப்பிரச்சாரம் மேற்கொண்டது அம்பலமாகியுள்ளது.

கேரளம் மிகப்பெரிய அழிவைச் சந்தித்துள்ள போது, பலரும் தங்களால் இயன்ற உதவிகளை கேரளத்திற்கு அளித்து வருகின்றனர். ஆனால், பெரும்பாலான பாஜக-வினர், கேரள வெள்ளப் பாதிப்பைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். கேரள மக்கள் மாட்டுக்கறி சாப்பிடுவதும், ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்ததும்தான் இந்த பேரழிவுக்கு காரணம் என்று வன்மம் கக்கி வருகின்றனர். கேரள நிவாரண நிதிக்கு பாஜக-வினர் நிதி அளிக்காதது மட்டுமன்றி, மற்றவர்களும் நிதியளிக்க வேண்டாம் என்று தடுத்து வருகின்றனர்.

இது கேரள மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக-வின் உண்மை முகம் அறியாமல் இதுவரை அக்கட்சியில் இருந்த பலரே கூட, தற்போது கூட்டம் கூட்டமாக அங்கிருந்து வெளியேறவும் துவங்கியுள்ளனர்.இதனால் கேரள மக்களை சமாளிக்கும் வேலையில் இறங்கியுள்ள பாஜக-வினர் வழக்கம்போல, ‘போட்டோஷாப்’ கலை மூலம் போலியான புகைப்படங்களை வெளியிட்டு பொய்ப்பிரச்சாரங்களை அவிழ்த்துவிடத் துவங்கியுள்ளனர்.

அதில் ஒன்றாகத்தான், பாஜக-வைச் சேர்ந்த ஸ்ரீதரன் நாயர் என்பவர், அவரது முகநூலில் “பாஜக அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கேரள வெள்ள நிவாரணத்திற்கு ரூ. 25 கோடி ரூபாயை வழங்கியுள்ளனர் ” என்று குறிப்பிட்டு, ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டார்.
அந்த புகைப்படத்தில், பாஜக மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தானம், பாஜக எம்.பி. முரளிதரன் ஆகியோர் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் காசோலையை வழங்குவது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. இது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.நிதியளித்தது உண்மைதானா? என்று சமூகவலைத்தளங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஆனால், ஸ்ரீதரன் நாயர் வெளியிட்ட புகைப்படத்தை, கேரள பாஜக-வினர் இஷ்டத்திற்கு முகநூலிலும், ட்விட்டரிலும் ஆயிரக்கணக்கில் ஷேர் செய்து, பெருமை பீற்ற ஆரம்பித்தனர்.
எனினும், கெட்டிக்காரன் புளுகு எட்டுநாள் என்பது போல, பாஜக-வினரின் புளுகுக் கதை எட்டுமணிநேரம்கூட நீடிக்கவில்லை.

மத்திய அமைச்சர் கண்ணந்தானம் தலைமையில் முதல்வரிடம் நிதியளிப்பது போன்ற புகைப்படம் உண்மைதான் எனவும், ஆனால், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பொரேசன் சார்பிலான நிதியளிப்பில்தான் அவர் கலந்து கொண்டிருக்கிறார் என்ற உண்மை சீக்கிரத்திலேயே வெளிப்பட்டு விட்டது.படத்தை வெளியிட்ட ஸ்ரீதரன் நாயர், கவனமாக இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தின் அதிகாரிகளை புகைப்படத்திலிருந்து வெட்டியெறிந்துவிட்டு, அமைச்சர் கண்ணந்தானமும், பாஜக எம்.பி. முரளிதரனும் இருப்பது போன்ற படத்தை மட்டும் போட்டு- பாஜக சார்பில் ரூ. 25 கோடி நிதி என்று கூறியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.பாஜக சார்பில் ஒரு பைசா கூட நிதி அளிக்கப்படாத நிலையில், ஸ்ரீதரன் நாயர் உள்ளிட்ட பாஜக-வினர் செய்த பொய்ப்பிரச்சாரம், கேரள மக்களை தற்போது மேலும் ஆத்திரத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: