===பெ.சண்முகம்===
வள்ளுவர் மழையை “அமிழ்தம்” என்றார். “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்பது அனுபவ மொழி. கேரள மக்கள் மழையை ரசிக்கக் கூடியவர்கள். அதனுடன் வாழப் பழகிக் கொண்டவர்கள் தான். ஆனால், அளவுக்கு மிஞ்சி அதுவே பேரழிவை ஏற்படுத்தும் போது, மக்களின் வாழ்வை தலைகீழாக புரட்டிப் போட்டு விட்டது பெருக்கெடுத்த வெள்ளம். கலங்கி நிற்கும் மக்களின் மனநிலை உணர்ந்து தான் கேரள முதலமைச்சர் சொல்லியிருக்கிறார்; நிவாரணம், புனரமைப்பு என்பதற்கு பதிலாக “புதிய கேரளத்தை நிர்மாணிப்போம்” என்று! இந்த வார்த்தை பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களில் மிகப் பெரும் தன்னம்பிக்கையை விதைத்திருக்கிறது. அதை நேரில் பார்த்தோம்.

பம்பரமாய் சுழல்கிறார்கள்
கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக மக்களிடம் சேகரிக்கப்பட்ட வெள்ள நிவாரணப் பொருட்களை ஒப்படைப்பதற்காக ஆகஸ்ட் 27 அன்று திருச்சூர் மாவட்டத்திற்கு சென்றோம். அங்கு சென்றவுடன் தான் முகாம்களில் தங்கியுள்ள மக்களையும், திருச்சூர் மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளர் தோழர்.டேவிஸ் உதவியுடன், முதலில் பொருட்களை வாங்கி விநியோகிக்கும் மையத்திற்கு சென்றோம். திருச்சூரில் உள்ள உள்விளையாட்டரங்கில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கொண்டு வரப்படும் பொருட்கள் அங்குதான் பிரித்து தனித்தனி பைகளில் கட்டி முகாம்களுக்கு அனுப்பப்படுகிறது.

உள்ளே நுழைந்தவுடன் திகைத்துப் போய்விட்டேன். சுமார் 700க்கும் மேற்பட்டவர்கள் குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள், மகளிர் என பெருங்கூட்டம்- மூட்டைகளை சுமப்பது, பொருட்களை பிரிப்பது, பைகளில் போடுவது, கைமாற்றி மற்றொரு இடத்திற்கு சேர்ப்பது என்று பம்பரமாய் ஓய்வின்றி இயங்கிக் கொண்டே இருப்பதை பார்த்து மலைத்தேன். அவ்வளவு பேரும் தன்னார்வத் தொண்டர்கள் தான். பலர் குடும்பத்துடன் வந்திருந்து இந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்தனர்.

அடுத்து மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட சாலக்குடி பகுதிக்குச் சென்றோம். செல்லும் வழியில் ஆர்.கே.ராகவபுரம் என்ற பகுதியில் 10க்கு மேற்பட்ட இளைஞர்கள் DYFI என்று பொறிக்கப்பட்ட டி-சர்ட் உடன் குப்பைகளை வாரிக் கொண்டிருந்தனர். வெள்ளம் பெருக்கெடுத்து ஓடினால் குப்பைகள் எப்படி மலை போல் குவியும் என்பதை 2015 வெள்ளத்தின் போது சென்னையில் நேரடியாக பார்த்திருக்கிறோம். கடந்த பத்து நாட்களாக பெருமழை, வெள்ளத்தால், ஒவ்வொரு தெருவின் முனையிலும் டன் கணக்கான குப்பைகள் குவிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை அகற்ற தூய்மைப்படுத்தும் பணியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். தூய்மைப் பணி செய்வதாக வேஷம் போடுவதற்காக குப்பைகளை எங்கிருந்தோ கொண்டு வந்து தூய்மையான இடத்தில் கொட்டிப் பெருக்கும் நபர்கள் வாழும் நாட்டில் படித்த இளைஞர்கள், பல்வேறு பணிகளில் உள்ளவர்கள் தூய்மைப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளதைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.

தங்கள் சொந்த வீட்டை விட்டு பாதிக்கப்பட்டு மற்றவர் உதவியை எதிர்பார்த்திருக்கும் மக்களை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும்; எவ்வளவு நல்ல இடத்தில் தங்க வைக்க வேண்டுமென்பதை அங்கு தான் கற்றுக் கொள்ள வேண்டும். இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்ற உணர்வோடு தான் அந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. துயரத்தில் உள்ளவர்களை சவுகரியமாக வைத்துக் கொள்வது என்ற உணர்வுடன் அவர்கள் செயல்படுகின்றனர்.

மக்கள் மீது அக்கறை
நெடுபுழா என்ற இடத்தில் உள்ள முகாமுக்கு சென்றோம். 26 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 80 பேர் தான் அன்றைய தினம் இருந்தார்கள். ஏற்கனவே ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அங்கு தங்கி இருந்துள்ளனர். மக்கள் அவரவர் வீடுகளுக்கு திரும்பிச் சென்று கொண்டுள்ளனர். அநேக வீட்டு வாசல்களில் நனைந்து போன பொருட்களை காய வைத்திருப்பதை நாங்கள் பார்த்தோம். பலரும் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.

அரசினர் மகளிர் பாலிடெக்னிக்கில் தான் அந்த மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அம்மக்களுக்கு தாழ்வு மனப்பான்மையோ, குற்றஉணர்ச்சியோ ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் ஆழ்ந்த அக்கறை செலுத்தப்பட்டிருந்ததை உணர முடிந்தது. ஒவ்வொரு முகாமுக்கும் ஒரு கிராம நிர்வாக அலுவலர் பொறுப்பு. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கொண்ட குழு உருவாக்கப்பட்டு மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படுகிறது. சாலக்குடியில், சமுதாயக் கூடத்தில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அரசால் கட்டப்பட்ட சமுதாயக் கூடம் தனியார் திருமண மண்டபங்களைப் போல அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளதை தமிழக ஆட்சியாளர்கள் சென்று பார்த்து வர வேண்டும். பி.கே.பிஜு எம்.பி அவர்களும் மக்களைச் சந்திக்க அங்கு வந்திருந்தார்.

மக்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் பகுதியில் தான் 10 அடி உயரத்திற்கு வெள்ளம் போயிருக்கிறது. பெரும்பாலும் குடிசை வீடுகளின் கூரை மேல் ஆறு ஓடியிருக்கிறது. பெரிய வீடுகளில் முதல்தளம் வரை தண்ணீர் பல நாள் இருந்திருக்கிறது. தங்கள் வாழ்நாள் உழைப்பு முழுவதையும் இந்த ஒரு வெள்ளம் கொண்டு போய்விட்டதை பலரும் தெரிவித்தனர். பலருக்கு தங்க வீடில்லை. எத்தனை நாள் முகாமில் இருக்க முடியும்; சான்றிதழ்கள், அடையாள அட்டைகள், பாடப் புத்தகங்கள் எல்லாம் போய்விட்டது என்று கூறினார்கள். எல்லாவற்றையும் வழங்க அரசு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறது என்றும், வீட்டை முற்றிலும் இழந்தவர்களுக்கு வீடுகட்டி கொடுப்பது சம்மந்தமாக உடனடியாக கணக்கெடுப்பு நடக்க இருப்பதாக தோழர்கள் தெரிவித்தனர்.

வாழை, ரப்பர், தென்னை ஆகிய பயிர்கள் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் அழிந்து போயுள்ளன. ஆடு, மாடு, கோழிகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. அம்மக்களை பொறுத்தவரை இவை ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்றால் மிகையல்ல. ஒவ்வொரு முகாமுக்கும் தினந்தோறும் மருத்துவர்கள் வந்து செல்கின்றனர். 29ந் தேதி பள்ளிக் கல்லூரிகள் திறக்க இருப்பதால் வேறு இடங்களுக்கு முகாமை மாற்றுவதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.

‘மறக்க முடியாத உதவி’
வேறொரு மாநிலத்திலிருந்து அம்மக்களை பார்க்க வந்ததில் மட்டற்ற மகிழ்ச்சியை அம்மக்கள் வெளிப்படுத்தினர். தமிழ்நாட்டின் உதவியை மறக்க மாட்டோம் என்று தெரிவித்தனர். பொருட்களை விட தமிழக மக்கள் உங்களுடன் இருக்கிறார்கள். இந்த துயரத்திலிருந்து நீங்கள் விரைவில் மீண்டு இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்று தெரிவித்தோம். சொந்த சகோதரர்கள் பாதிக்கப்பட்டுள்ள போது உதவிட வேண்டியது எங்கள் கடமை என்ற முறையில் தான் இந்த உதவியை நாங்கள் செய்திருக்கிறோம் என்பதை தெரிவித்தேன்.

மாபெரும் மார்க்சிய அரசியல் இயக்கம், மக்களை பாதுகாக்கும் பணியில், புனரமைப்பு பணிகளில், நிவாரணப் பணிகளில் தனது ஊழியர்களை ஈடுபடுத்தி இருப்பதை எல்லா இடங்களிலும் கண்டோம். தமிழகத்தில் அத்தகைய பண்பாடு குறிப்பாக ஆளுங்கட்சிக்கு, பெரிய அரசியல் கட்சிகளுக்கு இல்லையென்பதை அறிவோம். சுனாமி, சென்னையை சூழ்ந்த பெரு வெள்ளம் போன்ற சமயங்களில் ஒருகோடிப் பேர் கட்சியில் இருப்பதாக சொன்னவர்கள் யாரும் அவர்களை மக்கள் பணியில் ஈடுபடுத்தவில்லை என்பது கசப்பான உண்மையாகும். கேரளப் பண்பாடு இதற்கு நேர் எதிரானது.

அரசியல் கட்சிகளில், அமைப்புகளில் இருப்பவர்களை இத்தகைய பணிகளில் ஈடுபடுத்தும் போது அது மாபெரும் மக்கள் இயக்கமாக மாறுகிறது. மக்களே இத்தகைய பணியில் ஈடுபடும் போது வெளிப்படைத் தன்மையும், அதிலுள்ள எதார்த்தமான பிரச்சனைகளையும் உணர்ந்து கொள்கின்றனர். ஊழல், ஒதுக்கிக் கொண்டார்கள், எனக்கு கிடைக்கவில்லை, ஒருவருக்கு கூடுதலாக கிடைத்தது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு இடமில்லாமல் போகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அதன் தலைமையிலான பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஊழியர்களும் மக்களுடன், மக்களுக்காக இரண்டறக் கலந்து பணியாற்றிக் கொண்டுள்ளனர். இதனுடைய “தலைமை நிர்வாகியாக முதலமைச்சர் பினராயி” என்று டெலிகிராப் பத்திரிக்கை மிகச் சரியாகவே சித்தரித்திருக்கிறது.

கேரளத்திற்கு உதவுவோம். கேரளத்திடமிருந்து கற்றுக் கொள்வோம்.

கட்டுரையாளர் : பொதுச்செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.

Leave a Reply

You must be logged in to post a comment.