திருப்பூர்,
திருப்பூர் நொய்யல் வீதியில் உள்ள ரேசன் கடையில் பொருட்கள் முறையாக விநியோகிக்கப்படுவதில்லை. அரசு விலையை விட கூடுதலாக கேட்பதாக கூறி புதனன்று பொதுமக்கள் ரேசன் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் நொய்யல் வீதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள ஐநூறு குடும்பங்களுக்கு எல்.கே.ஓ 36 என்ற ரேசன் கடையில் பொருள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேசன் கடையை வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே திறக்கின்றார்கள். அதுவும் சரியான நேரத்திற்கு திறப்பதில்லை. மேலும் சரியான முறையில் பொருட்கள் விநியோகிக்கப்படுவதில்லை. மேலும், ரேசன் பொருட்களுக்கு அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் தொகைகேட்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் புதனன்று மண்ணெண்ணெய் வழங்குவதாக கூறினர். ஆனால், காலை 11 மணி வரை கடையை திறக்காததால் அப்பகுதி பெண்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கடையினை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.