திருப்பூர்,
திருப்பூரில் குடிநீர் பிடிப்பதற்காக வேலையை விட்டு வந்து சம்பளத்தை இழக்கும் நிலை ஏற்படுவதால் மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் விநியோகம் செய்யும் நேரத்தை முறைப்படுத்த வேண்டும் என்று பனியன் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருப்பூரில் ஆயிரக்கணக்கான பனியன் தொழிற்சாலைகளில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் சுமார் 40 சதவிகிதம் பேர் பெண் தொழிலாளர்கள் ஆவர். திருப்பூரில் பின்னலாடைத் தொழில் சீராக நடைபெற்று வரும்போது நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 12 மணி நேரம் வேலை இருக்கும். தொழிலாளர்கள் வாரத்தில் ஆறு நாட்களும் வேலை செய்து சம்பளம் பெற்று வந்தனர். ஆனால் உயர் பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமலாக்கத்துக்குப் பிறகு திருப்பூர் பின்னலாடைத் தொழில் கடும் நெருக்கடி நிலைக்குள் தள்ளப்பட்டு உள்ளது. மிகப்பெரும் நிறுவனங்களின் பாதிப்பு சமாளிக்க கூடியதாக இருந்தாலும், நடுத்தர, சிறு, குறு பனியன் நிறுவனங்களின் நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலை குறைந்து போய், தொழிலாளர்களுக்கும் முழுமையாக வேலை தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வேலை குறைந்து போனதால் தொழிலாளர்கள் வருமானமும் குறைந்துள்ளது. இது அவர்களின் சராசரி வாழ்க்கையை நகர்த்துவதற்கே பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. இது ஆண், பெண் என சகல பகுதி தொழிலாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தாலும், பெண் தொழிலாளர்கள்தான் கூடுதல் நெருக்கடியைச் சந்திக்கும் நிலை உள்ளது. பனியன் நிறுவனத்தில் வேலை குறைந்ததனால் வருமானம் குறைகிறது என்பது ஒருபுறம் இருக்க வேறு வகையான பாதிப்புகளையும் சந்திக்கின்றனர். குறிப்பாக, மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் விநியோகம் செய்வதில் எவ்வித முன்னறிவிப்போ, திட்டமிடலோ இல்லாமல் தன்னிச்சைப் போக்கை கடைப்பிடிக்கிறது. எனவே எப்போது குடிநீர் வரும் என்றே தெரியாத நிலையில் பெண்கள் சிரமப்படுகின்றனர். முன்பெல்லாம் வாரம் முழுவதும் வேலை இருக்கும்போது, குடிநீர் பிடிப்பதற்காக ஓரிரு மணி நேரம் விடுப்பு எடுத்து வீட்டிற்கு வந்து குடிநீரை சேமித்து வைத்துவிட்டு வேலைக்குச் செல்வார்கள். அப்போதும் அந்த நேரத்திற்கான சம்பளம் குறைந்தாலும் பெரிய பாதிப்பாகத் தெரியாது.

ஆனால் இப்போது இருக்கும் சூழ்நிலையில் ஒரு வாரத்துக்கு ஐந்து அல்லது ஆறு ஷிப்ட் வேலை மட்டுமே கிடைப்பதால் அதில் கிடைக்கும் சம்பளம் வாழ்க்கைப் பற்றாக்குறையைச் சமாளிக்க மிகவும் அவசியமாகும். அதாவது முன்பெல்லாம் வாரம் முழுவதும் வேலை இருக்கும்போது சராசரியாக ரூ. 2 ஆயிரத்தில் இருந்து ரூ.2,500 வரை சம்பளம் கிடைக்கும். ஆனால் இப்போதோ ரூ.1500 கிடைப்பதே அரிதாக உள்ளது என்கின்றனர் பெண்கள். இந்நிலையில் வீட்டில் குடிநீர் வரும் நேரத்தில் குடிநீர் பிடிக்காமல் விட்டால் அதற்கும் அல்லாட வேண்டியிருக்கும். குடிநீர் பிடிக்க வேண்டுமே என வேலையில் இருந்து அரை ஷிப்ட் விடுப்பு சொல்லிவிட்டு வந்தாலும் அதிலும் ரூ.200 வரை இழப்பு ஏற்படும். ஒவ்வொரு வாரமும் இதுபோல் வேலை நாளில் அரை நாள் குடிநீர் பிடிப்பதற்கே விடுப்பு எடுத்தால் மாதம் ரூ.1000 வரை வருமானம் இழக்க நேரிடுகிறது என்று வேதனைப்படுகின்றனர் பெண்கள்.எனவே இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்கின்றனர் பெண்கள். மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் விநியோகம் செய்யும் நேரத்தை முறைப்படுத்தினால் நல்லது. முன்கூட்டியே இந்த நேரத்தில் குடிநீர் வரும் எனத் தெரிந்துவிட்டால் அதற்கேற்ப கம்பெனியில் வேலை நேரத்தை மாற்றி வருமான இழப்பைத் தவிர்க்க முடியும். அதைவிடவும் விடுமுறை நாட்களில் குடிநீர் விநியோகம் செய்தால்கூட பரவாயில்லை என்கின்றனர் தொழிலாளர்கள்.

திருப்பூர் மாநகராட்சியிலோ குடிநீர் விநியோக நேரம் என்பது திட்டமிடப்படாததாகவே பல ஆண்டு காலமாக உள்ளது. ஒரு குடியிருப்பில் ஒரு வார்டில் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை, எந்த நேரத்தில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்பது மக்களுக்குத் தெரியாது. நள்ளிரவில், அதிகாலை 2 அல்லது 3 மணிக்குக் கூட குடிநீர் விநியோகம் செய்யப்படும். அதுபோன்ற சமயங்களில் உழைக்கும் மக்கள் தூக்கத்தை இழந்து குடிநீரை பிடிக்க வேண்டியிருக்கும். ஒரு சில நகரங்களில், குறிப்பாக தூத்துக்குடி மாநகராட்சியில்கூட பல ஆண்டுகளுக்கு முன்பே, எந்தெந்த வார்டில், எந்தெந்த வீதியில் எப்போது குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று தெளிவாக முன்னறிவிப்பு செய்து குடிநீர் வழங்கப்படுவதாக கூறப்பட்டது. பெண் உழைப்பாளிகள் பல லட்சம் பேர் இருக்கும் திருப்பூரில் ஏன் இந்த நடைமுறையை மாநகராட்சி நிர்வாகம் முயன்று பார்க்கக் கூடாது என்பதே பெண்களின் கேள்வியாகும். தமிழக அரசிடம் சிறந்த மாநகராட்சி என பரிசு பெற்ற திருப்பூர் மாநகர நிர்வாகம் குடிநீர் விசயத்தில் விநியோகத்தை முறைப்படுத்தி னாலே பேருதவியாக இருக்கும். இதுவே பெண்களின் எதிர்பார்ப்பு ஆகும். (ந.நி)

Leave A Reply

%d bloggers like this: