கடலூர்,
கடலூர் ஒன்றியம் மேல்அழிஞ்சிப்பட்டில் நடைபெற்ற அரசியல் விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஜி. ராமகிருஷ்ணன்,“ மேல் அழிஞ்சிப்பட்டு கிராமத்தில் குத்தகை விவசாயிகளை பாதுகாக்கவும், வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் மறைந்த தோழர்கள் என்.ஆர். ராமசாமி, டி.ஆர். விஸ்வநாதன், ஆர்.என். சுப்பரமணியன் உள்ளிட்டோர் 34 ஆண்டுகளுக்கு முன்பு போராடியதை நினைவுபடுத்தினர்.

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கடந்துவிட்டாலும் ஆட்சியாளர்களை நினைத்தால் மக்கள் முகம் சுளிக்கும் நிலைதான் உள்ளது. சத்துணவு உதவியாளர் முதல் துணைவேந்தர் நியமனம் வரை அனைத்துக்கும் லஞ்சம் கொடுத்தால்தான் என்ற நிலை உருவாகி உள்ளது. சாமி சிலை திருட்டு வழக்கில் யார் சம்மந்தப்படவில்லை?. அதிகாரிகள் முதல் அமைச்சர் வரை தொடர்பு இருப்பதால் அதிலிருந்து தப்பிக்க சிபிஐ விசாரிக்க பரிந்துரைக்கின்றனர். குட்கா ஊழலில் அமைச்சர் விஜய பாஸ்கர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்கள் மீதும் ஊழல் வழக்குகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார். ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளின் வருவாயை இருமடங்காக உயர்த்துவேன் என்று கூறினார் மோடி. உயர்ந்ததா என்றால் இல்லை. விவசாயிகள், உழைப்பாளர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் எந்தவித போராட்டமும் நடத்த அனுமதி கிடையாது. ஊழல்வாதிகளான அதிமுகவையும், மதவாத பாஜகவையும் எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி போராடும் என்றார்.

இந்த பொதுக் கூட்டத்திற்கு கிளைச் செயலாளர் ஏ.பாண்டுரங்கன் தலைமை தாங்கினார். எம்.கடவுள் வரவேற்றார். கிளைச் செயலாளர்கள் வி.எத்திராஜ், இ.பாலகிருஷ்ணன், டி. ஆடல்அரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர் கோ.மாதவன், ஒன்றியச் செயலாளர் ஜெ.ராஜேஷ்கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.தட்சணாமூர்த்தி, ஆர்.அமர்நாத், ஆர்.தமிழரசன் உள்ளிட்டோர் பேசினர். டி. பஞ்சாட்சரம் நன்றி கூறினார்.  கடலூர் நெய்தல் கலைக்குழுவின் மக்களிசை நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனிடம் கட்சி வளர்ச்சி நிதி அளிக்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: