மும்பை:
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு புதனன்று, வரலாற்றில் இல்லாத அளவு கடுமையாக சரிந்தது.

துருக்கியின் பொருளாதார சரிவின் காரணமாக அதன் நாணயம் ‘லிரா’ கடும் சரிவை சந்தித்து வருகிறது. இதனால் அண்மைகாலமாக உலக அளவில் டாலருக்கு நிகரான நாணய மதிப்பில் பல்வேறு நாணயங்களும் சரிவினை கண்டுள்ளன. இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் வீழ்ச்சி கண்டுள்ளது.

அந்நிய நேரடி முதலீடு குறைவு மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்றமும் ரூபாய் மதிப்பு சரிவில் தாக்கத்தை உருவாக்கியது. இதனால் கடந்த 3 மாதங்களாகவே இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு தற்போது வரலாற்றில் இல்லாத அளவு சரிவடைந்துள்ளது.

புதன் காலை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு, 43 காசுகள் சரிந்து, 70.52 ரூபாயாக வர்த்தகமானது. இந்த சரிவு வரலாற்றில் இதுவரை இல்லாத ஒன்றாகும்.
அமெரிக்க -மெக்ஸிகோ வர்த்தக உடன்பாடு ஏற்பட்டதால் அதன் காரணமாக சர்வதேச அளவில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்தது. அதன் தாக்கத்தால் ஆசிய நாணயங்களின் மதிப்பு புதனன்று காலை சரிந்தது.

இதன் பாதிப்பால் இந்திய ரூபாய் மதிப்பு அதிகமாக சரிவடைந்ததாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுபோலவே தொழில் வர்த்தக பற்றாக்குறை, தங்க வர்த்தகத்தில் ஏற்பட்ட தாக்கம் போன்றவையும் இந்திய ரூபாய் சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.

Leave A Reply

%d bloggers like this: