புதுதில்லி,

இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்த 18 வகையான பூச்சிக்கொல்லி மருந்துகள் உபயோகப்படுத்த  இந்திய அரசு தடை விதித்துள்ளது. இதுபோன்ற  பூச்சிக்கொல்லி  மருந்து களை உற்பத்திசெய்யவும்  மத்திய வேளாண் துறைஅமைச்சகம் தடை விதித்துள்ளது.
விவசாயத்தில் பயன்படுத்தும் சில பூச்சிக்கொல்லி மருந்துகள், மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. உலகின் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள பூச்சிக்கொல்லி மருந்துகள் இந்தியாவில் மட்டும் பயன்பாட்டில் உள்ளன.
இதனால் இந்தியாவில் பூச்சிக்கொல்லி மருந்துகளால் வருடத்துக்கு 10 ஆயிரம் பேர் இறப்பதாக உண்மை கண்டறியும் குழு அதிர்ச்சியூட்டும் தகவலை ஏற்கனவே வெளியிட்டிருந்தது. இந்நிலையில் 66 பூச்சிக்கொல்லி மருந்துகளை தடைசெய்வது குறித்து கடந்த 2013-ம் ஆண்டு முதல் மத்திய வேளாண் துறை ஆய்வு நடத்தி வந்தது.
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் அனுபம் சர்மா தலைமை யிலான வல்லுனர் குழு நடத்திய ஆய்வில், சோடியம் சயனைடு, எத்தில் மெர்க்குரி, குளோரைடு, டையசினியான் உள்ளிட்ட  18 மருந்துகளால், மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்களின் உடல்நலத்திற்கு பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனால் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய 18 பூச்சிக்கொல்லி ரசாயனங்களின் உற்பத்தி, விற்பனை,  இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்கு மத்திய வேளாண் துறை அமைச்சகம் தடை விதிக்க கோரியிருந்தது.
அதன் அடிப்படையில் 18 பூச்சிக்கொல்லி மருந்துகள் உபயோகப்படுத்தவும், தயாரிக்கவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்தோ மத்திய அரசின் நடவடிக்கையை வரவேற்றுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: