அகர்தால: படகு போட்டி ஒன்றை துவக்கி வைத்து பேசிய திரிபுராவின் பாஜக முதல்வர் தண்ணீரில் வாத்துக்கள் நீந்தும் போது ஆக்சிஜன் அளவு அதிகரித்து மீன்கள் வேகமாக வளருவதாக தெரிவித்துள்ளார். இது அறிவியல் ஆய்வாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திரிபுராவின் ருத்ராசாகர் பகுதியில் நடந்த படகுப் போட்டியை தொடங்கி வைத்த முதல்வர் பிப்லப் குமார் தேப் ., “ஏரியின் அருகில் வசிக்கும் மீனவர்களுக்கு 50 ஆயிரம் வாத்துகள் அரசு சார்பில் வழங்கப்படும். வாத்துகள் ஏரியில் நீந்தும் போது தண்ணீரில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும். இதனால், அங்குள்ள மீன்கள் அதிக ஆக்சிஜனை பெற முடியும். அதிக ஆக்சிஜனை பெறுவதால் மீன்கள் வேகமாக வளரும். இதெல்லாம் முழுக்க முழுக்க இயற்கை வழியிலேயே நடக்கின்றது” என கூறினார். அப்போது உடன் இருந்த அதிகாரிகள் செய்வதறியாது, சிரிக்கவும் முடியாமல் நெளிந்தனர். இந்த பேச்சை கேட்ட அறிவியல் ஆய்வாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஒரு முதல்வரே இப்படி அறிவியலுக்கும், பகுத்தறிவிற்கும் பொருத்தமின்றி பேசுவது, எதிர்கால சந்ததியினரை எங்கே கொண்டு போய் சேர்க்கும் என விமர்சித்து வருகின்றனர். பிப்லப் குமார் தேப் ஏற்கனவே மகாபாரத காலத்திலேயே இணையதளம் இருந்ததாக கூறி நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: