புதுதில்லி;
பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் ‘கிம்போ ஆப்’பின் வெளியீட்டுத் தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாகத் திகழும் ‘வாட்ஸ் ஆப்’ இந்தியாவில் 20 கோடி பயனர்களைக் கொண்டுள்ளது. இந்நிலையில் வாட்ஸ் அப்புக்கு போட்டியாக பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி’ ஆயுர்வேத நிறுவனம் ‘கிம்போ ஆப்’ என்ற செயலியை இந்தியாவில் தொடங்க திட்டமிட்டது. இந்த, ‘கிம்போ ஆப்’ ஆகஸ்ட் 27-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தது. ஆனால், பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “கிம்போ ஆப்’பின் புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று மீண்டும் பின்வாங்கியுள்ளார்.

முன்னதாக ‘ஸ்வதேசி’ என்ற பெயரில் கடந்த மே 30-ஆம் தேதியே ‘கிம்போ ஆப்’ வெளியிடப்பட்டது. ஆனால், அடுத்த 1 மணிநேரத்திலேயே கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து அது நீக்கப்பட்டது. காரணம், இந்த ‘கிம்போ ஆப்’ ஒரு திருடப்பட்ட செயலி என்று புகார்கள் எழுந்ததே காரணம்.

ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டாரில் பதஞ்சலி கம்யூனிகேஷன் என்ற பெயரில் பதிவேற்றப்பட்ட கிம்போ ஆப், iOS ஆப் ஸ்டோரில் Appdios Inc என்ற பெயரில் பதிவேற்றப்பட்டு இருந்தது. இந்த Appdios, அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிறுவனம் என்ற நிலையில், ‘கிம்போ ஆப்’ திருடப்பட்டது என்று கூகுள் ப்ளே ஸ்டோருக்கு புகார்கள் சென்றன. இதனால் கிம்போ ஆப்-பை கூகுள் நீக்கியது.பின்னர் புதிய வடிவில், `end-to-end encryption’ உள்ளிட்ட சில மாற்றங்களுடன் ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்தச் செயலியின் சோதனை வெர்ஷனை பதஞ்சலி வெளியிட்டது. “இந்த கிம்போ ஆப்- உங்களது தகவல்களை எந்தக் காரணம் கொண்டும் யாருக்கும் அனுப்பவோ, விற்பனை செய்யவோ மாட்டாது” என்று விளக்கமும் அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்த முறையும் பயனர்களிடமிருந்து சில புகார்கள் எழுந்தன. இவற்றுக்கு இடையே 50 ஆயிரம் பேர் ‘கிம்போ ஆப்’பை டவுன்லோட் செய்ததும் நடந்தது. ராம்தேவும் “ஆகஸ்ட் 27 அன்று, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி முன்னிலையில் தனது ‘கிம்போ ஆப்’ புதுதில்லியில் வெளியிடப்படும்” என்றார். ஆனால், தற்போது அதிலிருந்தும் பதஞ்சலி பின்வாங்கியுள்ளது. வெளியீட்டுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று ஆச்சார்யா பாலகிருஷ்ணா பதுங்கியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: