சேலம்,
சேலத்தில் வீடு விற்பனை பத்திரத்தை வழங்க இருபதாயிரம் லஞ்சம் வாங்கிய வீட்டுவசதி வாரிய அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் செவ்வாயன்று கைது செய்தனர்.

சேலம் பெரமனூர் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. ஒய்வுபெற்ற மின்வாரிய அலுவலக தணிக்கை அலுவலரான இவர் கடந்த 1995ம் ஆண்டு பணியில் இருந்தபோது வீட்டு வசதி வாரியம் மூலம் வீடு ஒன்று வாங்கியுள்ளார். இந்த வீட்டிற்கான தொகை தவணை மூலம் செலுத்தி முடிக்கப்பட்ட நிலையில், வீடு விற்பனை செய்ததற்கான பத்திரத்தை கேட்டு கோரிமேடு அருகே உள்ள அய்யந்திருமாளிகை வீட்டுவசதி வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவர் கோரிய பத்திரத்தை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இந்நிலையில், விற்பனை பத்திரம் வழங்க வேண்டும் என்றால் ரூ.20 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என்று அந்த அலுவலகத்தின் நிர்வாக பெறியாளரின் உதவியாளர் தனசேகரன் என்பவர் கேட்டுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க மனமில்லாத துரைசாமி, இதுகுறித்து லஞ்ச ஒழிப்புபிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த அறிவுரையின்படி செவ்வாயன்று துரைசாமி ரூ.20 ஆயிரத்தை தனசேகரனிடம் கொடுக்க சென்றுள்ளார்.  அப்போது, அலுவலகத்தின் அருகே உள்ள ஜெராக்ஸ் கடைக்கு வரவழைத்த தனசேகரன், அந்த தொகையை அங்கு வைத்து பெற்றுக்கொண்டார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தனசேகரனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.