புதுதில்லி;
கேரளத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பையொட்டி, மத்தியில் ஆளும் மோடி அரசு ரூ. 600 கோடி மட்டுமே நிவாரண நிதி அறிவித்திருந்தது. ஆனால், நாட்டிலுள்ள சாதாரண மக்கள், மத்திய அரசு வழங்கியதைக் காட்டிலும் கூடுதலாக 114 கோடி ரூபாயை கேரளத்திற்கு அள்ளித் தந்துள்ளனர்.

முதல்வரின் வங்கிக் கணக்குக்கு வங்கிக் காசோலை, வரைவோலை, செலுத்துகை சீட்டு மற்றும் முதல்வரிடமே நேரடியாக நிதியை அளித்தல் என இதுவரை ரூ. 713 கோடியே 92 லட்சத்தை, கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதியில் அவர்கள் சேர்த்துள்ளனர்.
கேரளத்தில் பெய்த வரலாறு காணாத கனமழை, அதனால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்டவற்றில் 350-க்கும் அதிகமானோர் பலியாகினர்.இவைதவிர, இடிந்து போன 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள், 90 ஆயிரம் கிலோ மீட்டர் அளவிற்கு உடைந்துபோன சாலைகள், நூற்றுக்கணக்கான பாலங்கள், நாசமான 50 ஆயிரம் ஏக்கர் அளவிலான விவசாயப் பயிர்கள் என சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பொருட்சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் முதற்கட்ட ஆய்வில் கேரளம் அரசு கூறியிருந்தது. தற்போது, ரூ. 35 ஆயிரம் கோடிக்கும் மேலான இழப்பைக் கேரளா சந்தித்துள்ளதாக மாநில நிர்வாகம் மதிப்பிட்டுள்ளது.

கேரள மாநிலத்தின் விவசாயம், சுற்றுலா, ஏற்றுமதி வர்த்தகம் உள்ளிட்ட அனைத்துத் தொழில்களும் முடங்கியுள்ள நிலையில், கேரளத்தின் மொத்த உள்மாநில உற்பத்தியில் (ஜிடிபி) 2.2 சதவிகிதம் வரையில் சரிவு ஏற்படும் என்று ‘அக்யூட் ரேட்டிங்ஸ்’ நிறுவனம் தனது ஆய்வில் கூறியுள்ளது.

சென்ற 2017-18 நிதியாண்டில் 3.2 சதவிகிதமாக இருந்த கேரளாவின் நிதிப் பற்றாக்குறை, இந்த நிதியாண்டில் 5.4 சதவிகிதமாக உயரும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.இந்நிலையில், கேரள அரசு உடனடி நிவாரணமாக ரூ. 2 ஆயிரத்து 600 கோடியை மோடி அரசிடம் கேட்டது. ஆனால், வெறும் ரூ. 600 கோடிக்கு மேல் மோடி அரசு தரவில்லை.இதனால், பேரிழப்பில் இருந்து கேரளம் மீண்டுவர பொதுமக்கள் தங்களால் முடிந்த உதவிகளை தாமாக முன்வந்து செய்ய வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் பகிரங்க வேண்டுகோள் விடுத்தார். நாட்டு மக்களும் அவரது கோரிக்கைக்கு செவி சாய்த்தனர்.அரிசி, பருப்பு, எண்ணெய், பலசரக்கு, துணிமணிகள், வீட்டு உபயோகப் பொருட்களை சேகரித்து அனுப்பி வைத்த மக்கள், இவைதவிர நிதியாக மட்டும் ரூ. 713 கோடியே 92 லட்சத்தை அள்ளித் தந்துள்ளனர். இது மத்திய அரசு வழங்கிய நிதியை காட்டிலும் (600 கோடி) 20 சதவிகிதம் அதிகம்.
யு.பி.ஐ. இணைய வழியாக ரூ. 132 கோடியே 62 லட்சம், பேய் டிஎம் வாயிலாக 43 கோடி, பாரத ஸ்டேட் வங்கி வாயிலாக 518 கோடியே 24 லட்சம், முதல்வரை நேரில் சந்தித்து பணம் மற்றும் காசோலையாக ரூ. 20 கோடி என அவர்கள் இந்த நிதியை வழங்கி கேரள மக்கள் மீது அன்பை பொழிந்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: