சென்னை,
அரசு மதுபானக்கடைகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளை அரசாணைப்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் சார்பில் சென்னையில் தொடர் போராட்டம் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே செவ்வாயன்று (ஆக. 28) துவங்கியது.

இதுகுறித்து மாநிலச்செயலாளர் பி.அரியகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக அரசின் மதுபானக் கடைகளில் உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள் மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர் என சுமார் 600க்கும் மேற்பட்டோர் கடந்த 15 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் வேலை செய்து வருகிறோம். அரசுத் துறைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு மேல் வேலை செய்கிற மாற்றுத் திறனாளிகளை நிரந்தரப்படுத்த வேண்டுமென தமிழக அரசின் 2008ஆம் ஆண்டு அரசாணை எண் 151 கூறுகிறது. அதனடிப்படையில் அரசு மதுபானக்கடைகளில் பல ஆண்டுகளாக வேலை செய்கிற மாற்றுத்திறனாளிகளை அரசு நிரந்தரப்படுத்தியிருக்க வேண்டும். இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மற்றும் டாஸ்மாக் உள்ளிட்ட தமிழக அரசின் உயர் அதிகாரிகளுக்கு பலமுறை மனுஅளித்தும், பல்வேறு போராட்டங்களை நடத்தியும் அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய மாற்றுத்திறனாளி ஆணையரகமும் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை.

எனவே அரசாணையின்படி டாஸ்மாக் மதுபானக்கடைகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சமூக விரோதிகளின் தாக்குதலில் இருந்து எங்களை காப்பாற்றும் வகையில் வேறு துறைகளில் பணி வழங்க வேண்டும். அரசின் கொள்கைப்படி மதுபானக் கடைகளை மூடும் போது எங்களுக்கு வேறு துறைகளில் பணி வழங்க வேண்டும். எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை எங்களது போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே மாநிலச் செயலாளர் பி.அரியகுமார், ஜீவா தலைமையில் 8 பேர் கொண்ட குழு மாற்றுத் திறனாளிகள் துறை கூடுதல் செயலாளர் மற்றும் மாற்றுத்திறனாளி ஆணையர் அருண்ராய் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அப்போது ஆணையர் அருண்ராய் அரசாணை 151-இன்படி அரசு எப்படி பணியமர்த்தப் போகிறீர்கள் என கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அரசும் பிற துறைகளில் இவர்களை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எனவே 3 மாத காலம் பொறுத்திருங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். இதில் மாநிலத் தலைவர் ஆர்.நாச்சியப்பன், பொருளாளர் எஸ்.ராஜன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: