கோவை,
தொழிலாளர் விரோத போக்கோடு செயல்படும் பிரிக்கால் நிறுவனத்தின் நடவடிக்கையை தடுத்திடக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் ஏஐசிசிடியு சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் பிரிக்கால் ஆலை நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை நிர்வாகம் கதவடைப்பு என்ற பெயரில் அங்கு பணியாற்றி வந்த 144 தொழிலாளர்களை கடந்த 16 ஆம் தேதி முதல் வேலையில் இருந்து நீக்கியுள்ளது.  முன்னதாக, சட்டவிரோதமாக தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையை திரும்ப கொடுக்க வேண்டும். ஆலை நிர்வாகத்துடன் தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஏதுவாக தேர்தல் நடத்திதகுதியான சங்கத்தை தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தை தொடர்ந்து தற்போது வேலை நீக்க நடவடிக்கையினை ஆலை நிர்வாகம் எடுத்துள்ளது. இவ்வாறு தொழிலாளர் விரோத போக்கோடு, அவர்களை பழிவாங்கும் நோக்கோடு மேற்கொள்ளப்பட்ட இந்த பணிநீக்கத்தை ரத்து செய்து, மீண்டும் தொழிலாளர்களை பணியில் சேர்க்க மாவட்ட ஆட்சியர் தலையிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.