திராவிட முன்னேற்ற கழகத்திற்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது :

திமுகவின் பொதுக்குழுக் கூட்டத்தில் திமுகவின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
திமுகவில் இணைந்து பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி கள அனுபவங்களைப் பெற்றவர் மு.க.ஸ்டாலின். இளைஞர் அணிச்செயலாளராக பணியாற்றியதோடு, டாக்டர் கலைஞர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், திமுகவின் செயல்தலைவராக திமுகவுக்கு தலைமையேற்று வழி நடத்தியவர். அவசர கால நிலையின் போது மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறைக் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டவர்.

இத்தகைய சூழலில், தமிழகமும், இந்திய தேசமும் பல்வேறு அரசியல் சவால்களை எதிர்கொண்டுள்ள காலகட்டத்தில் திரு. மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் மக்கள் நலனை காவு கொடுத்து, ஊழலில் மூழ்கி, மாநில உரிமைகள் பறிக்கப்பட்ட போதும், மத்திய பாஜக அரசுக்கு எடுபிடியாக செயல்படும் அதிமுக அரசின் ஜனநாயக உரிமைகள் பறிப்புக்கு எதிராக போராட வேண்டிய தேவைகள் அதிகரித்து கொண்டுள்ள காலமாகும்.
இன்னொருபக்கம் மத்திய பாஜக ஆட்சி மதச்சார்பின்மையை காவு கொடுத்து மதவெறி ஆட்சியினை நடத்தி வருகிறது. மாநில உரிமைகள் பறிப்பு, தமிழை பின்னுக்குத்தள்ளி இந்தி திணிப்பு, இந்தியாவின் பன்முகத்தன்மை சீர்குலைவு போன்ற இந்தியாவின் பாரம்பரிய மாண்புகளை அழித்து வரும் பாஜகவை எதிர்த்து நாடு தழுவிய அளவில் மதச்சார்பற்ற சக்திகள் இணைந்து போராட வேண்டிய தேவைகள் அதிகரித்து வரும் காலமாகும்.

இத்தகைய சூழலில், இடதுசாரி மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளோடும், திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்து மேற்கண்ட சவால்களை எதிர்த்துப் போராடுகிற கடமையை மு.க.ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையோடு மீண்டும் ஒருமுறை அவருக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.