லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் 70 குழந்தைதள் இறந்த விவகாரத்தில் முதல்வர் ஆதித்யநாத் அரசியல் செய்கிறார், மக்களைத் திசைத் திருப்புகிறார் என்று டாக்டர் கபீல்கான் கொந்தளித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குழந்தைகள் பிரிவில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூச்சுத்திணறி இறந்தன.மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சப்ளை செய்த நிறுவனத்துக்கு, நிலுவை தொகையை மருத்துவமனை நிர்வாகம் செலுத்தாத காரணத்தால், ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளையை அந்த நிறுவனம் நிறுத்தியதே, ஆக்ஸிஜன் பற்றாக்குறைக்கு காரணம் என்று கூறப்பட்டது.
எனினும், அப்போது குழந்தைகள் பிரிவில் பணியாற்றிய டாக்டர் கபீல்கான் தனது சொந்த செலவில் ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி ஏராளமான குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றினார். இந்தச் செயலுக்காக அவர் பொதுமக்கள் அனைவராலும் பாராட்டப்பட்டார். டாக்டர் கபீல்கான் அங்குள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் குழந்தைகள் நலப்பிரிவு உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார்.

ஆனால், பாஜக முதல்வரான ஆதித்யநாத், குழந்தைகள் இறப்புக்கு கபீல்கான் மீதே குற்றம்சாட்டி அவரைச் சிறையில் அடைத்தார். ஜாமீன்கூட பெற முடியாத அளவுக்கு சித்ரவதைகளை அளித்தார். இதனால் சிறையிலேயே கடும் உடல்நலப் பாதிப்புக்கு உள்ளான கபீல்கான், 8 மாதங்களுக்கு பிறகே, கடுமையாக போராடி வெளியே வந்தார்.

இதனிடையே, 70 குழந்தைகள் இறந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், கோரக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஆதித்யநாத், கோரக்பூர் மருத்துவமனையின் மருத்துவர்களுக்குள் நடந்த பூசல்தான் குழந்தைகள் இறப்புக்குக் காரணம் என்றும், ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமல்ல என்றும் மீண்டும் புனைகதை ஒன்றை அவிழ்த்து விட்டார். இது பிரச்சனையை மீண்டும் கிளறிவிடுவதாக அமைந்தது.முதல்வர் ஆதித்யநாத்தின் குற்றச்சாட்டைக் கேட்டு ஆவேசமடைந்த டாக்டர் கபீல்கான், தில்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.அப்போது, “முதல்வர் ஆதித்யநாத் பேசுவது அனைத்தும் தவறானது” என்ற அவர், “குழந்தைகள் பிரிவுக்கு ஆக்சிஜன் சப்ளை செய்யும் நிறுவனம், கடிதம் எழுதி, தங்களுக்கு நிலுவையில் இருக்கும் தொகையை செலுத்தக்கோரிக் கேட்டிருந்தனர்; அதைச் செலுத்தினால்தான் ஆக்சிஜன் சப்ளை செய்யமுடியும் என்று தெரிவித்திருந்தனர்; ஆனால், மருத்துவமனை நிர்வாகம் பணத்தை செலுத்தவில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், “ பச்சிளங்குழந்தைகள் யாரும் மூளை அழற்சி நோயால் பாதிக்கப்படவில்லை; ஏராளமான குழந்தைகள் ஆக்சிஜன் இல்லாமல்தான் இறந்தனர்; ஆனால் முதல்வர் ஆதித்யநாத் குழந்தைகள் இறந்த விவகாரத்திலும் அரசியல் செய்கிறார், மக்களை திசைதிருப்ப பொய்களை சொல்கிறார்” என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: