திருவனந்தபுரம்: வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரளாவின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படக்கூடிய குட்டநாடு பகுதியைச் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் இணைந்து 70 ஆயிரம் பேர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெருமழையாக மாறி தொடர்ந்து 10 நாட்கள் பெய்தது. இதில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் கேரள மாநிலமே கடும் பாதிப்பை சந்தித்து உருக்குலைந்து இருக்கிறது. 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் மழை குறைந்து வெள்ள நீர் வடிந்து வருகிறது. மக்கள் மெல்ல தங்கள் வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர். இன்னும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கி இருக்கிறார்கள்.

வெள்ளத்தில் குட்டநாடு பகுதி பெரும் பாதிப்புக்கு உள்ளானது. வீடுகள், பள்ளிக்கூடங்கள், கோயில்கள், தேவாலயங்கள், கடைகள் என ஏராளமானவை சேதமடைந்தன. வெள்ள நீர் வடிந்த நிலையிலும் சேறு, கழிவுகள் சேர்ந்து மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில் இதனை உடனே அகற்ற வேண்டும் என பொதுப்பணித்துறை அமைச்சர் சுதாகரன், கல்வி அமைச்சர் ரவிந்திரன் ஆகியோர் தலைமையில் திட்டமிட்டனர்.

அதன்படி அப்பகுதியில் உள்ள அனைத்து எம்எல்ஏக்கள், அரசியல் கட்சியினர், தன்னார்வலர்களை ஒன்றிணைத்து சுத்தம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி படகுகள், பஸ்கள், லாரிகள், டிராக்டர்கள், இரு சக்கர வாகனங்களில் என கூட்டம் கூட்டமாகத் தன்னார்வலர்கள் குட்டநாடு பகுதிக்கு வரத் தொடங்கினார்கள். மொத்தம் 70 ஆயிரம் பேர் ஓரே நேரத்தில் சுத்தம் செய்யும் பணியை துவங்கியிருக்கின்றனர். இப்பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் முதல்வர் தெரிவித்திருப்பது போல் விரைவில் புதிய கேரளத்தை உருவாக்குவோம் என உற்சாகத்துடன் களப்பணியாற்றி வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.