நாமக்கல்,
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல்வேறு தரப்பினரும் நிதி மற்றும் நிவாரண பொருட்களை அளித்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் எல்ஐசி ஊழியர் சங்கத்தின் திருச்செங்கோடு கிளை சார்பில் எல்ஐசி ஊழியர் சங்கத்தின் நிர்வாகி எம்.கணேசபாண்டியன் தலைமையில் கேரள வெள்ள நிவாரண சேகரிப்பு இயக்கம் நடைபெற்றது. இதில் 250 கிலோ அரிசி, 50 கிலோ பருப்பு மற்றும் வேஷ்டி, சேலை உள்ளிட்ட ஆடைகள், மருந்து பொருட்கள் உள்ளிட்ட ஒரு லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் சேகரிக்கப்பட்டன. இப்பொருட்கள் அனைத்தும் கேரள மாநிலம்திருச்சூர் சாலக்குடி பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக விநியோகிக்கப்பட்டது.

இதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்செங்கோடு ஒன்றிய மற்றும் நகரக் குழுவின் சார்பில் விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் 46 சிப்பம் அரிசி மூட்டைகள், 350 வேஷ்டிகள், 600 துண்டு உட்பட ரூ.1 லட்சத்து 50 ஆயிரம்மதிப்புள்ள வெள்ள நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டது. இப்பொருட்கள் அனைத்தும் திருச்செங்கோடு நகர செயலாளர் ஐ.ராயப்பன் தலைமையிலான குழுவினர் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினர்.

கோவை:
கோவை மாவட்ட பிஎஸ்என்எல் ஓய்வூதியர் அமைப்பின் சார்பில் கேரள மாநில வெள்ள நிவாரண நிதியாக ரூ.54 ஆயிரத்து 500ஐ சங்கத்தின் மாவட்டப் பொறுப்பு செயலர் வெங்கடராமனிடம், மாவட்டப் பொருளாளர் வெங்கட்ராஜுலு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் லியோ, செல்வராஜ், தங்கவேலு, சந்திரசேகரன் உள்ளிட்ட ஊழியர்கள் உடனிருந்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் எண்,4 வீரபாண்டி, வினோபாவே, அறிவொளிநகர் ஆகியகிளைகளின் சார்பில் பொதுமக்களிடம் சேகரிக்கப்பட்ட ரூ.10 ஆயிரம் நிதியை கட்சியின் ஒன்றிய செயலாளர் என்.பாலமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சிவராஜன், ராமச்சந்திரன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிறுவனின் தாராளம்:
கோவை சேரன் மாநகரை சேர்ந்த பாரதி சங்கர் – சொர்ணகுமாரி தம்பதியினரின் மகனும், ஜிஆர்டி பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயிலும் சிறுவனான ஆருஷ்பாரதி தனது உண்டியல் சேமிப்பு பணம் ஆயிரத்து 510 ரூபாயை கேரள வெள்ள நிவாரணமாக மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தியிடம் அளித்தார். இச்சிறுவனை மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.