ஈரோடு,
பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட குழிகளை மீண்டும் சீரமைத்து தரக்கோரி ஈரோட்டில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாநகராட்சி சூரம்பட்டி வலசு முதல் சூரம்பட்டி நால்ரோடு வரை பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்காக சாலைகள் இரண்டு முறை தோண்டப்பட்டது. இதன்பின்னர் சாலை சீரமைக்கப்படாததால் கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக அப்பகுதியினர் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, அப்பகுதி முழுவதும் வாகனங்கள் அதிக அளவில் சென்று வருவதால் புழுதி படலமாக மாறியுள்ளது. இதன்காரணமாக அப்பகுதியை சேர்ந்த வணிகர்களுக்கும் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் வணிகர்கள் கடந்த மாதம் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் உடனடியாக சாலையை சீரமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். ஆனால், இன்றுவரை அதுதொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் செவ்வாயன்று சூரப்பட்டி வலசு முதல் சூரம்பட்டி நால்ரோடு வரை சாலையின் இரு புறங்களிலும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை வணிகர்கள் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாநகராட்சி நிர்வாகம் சாலை அமைப்பது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தொடர் போராட்டங்களில் ஈடுபடவுள்ளதாகவும் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.