புதுதில்லி,
மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் தமிழகத்தில் உள்ள 69 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் மாநில அரசுகளால் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வழங்கப்படும் இடஒதுக்கீடு 50 சதவீகிதத்திற்கும் மிகாமல் இருக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கடந்த 1992-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது.

ஆனால் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சிறப்பு தீர்மானத்தின்படி, தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 69 சதவீத இடஒதுக்கீடு முறை தற்போது வரை பின்பற்றப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையிலும் 69 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது.

இந்த 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்ச நிதிமன்றத்தில் சுமார் 25 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இந்தநிலையில், தமிழக மருத்துவ கல்லூரிகளில் அமலில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக சி.வி.காயத்ரி உள்ளிட்ட சில மாணவ-மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்து இருந்தனர்.

இந்த மனுவை  விசாரித்த உச்சநீதிமன்றம்  முந்தையை ஆண்டுகளில் தனித்தனி மனுக்களின் மீது கூடுதலாக இடம் ஒதுக்கி அனுமதி வழங்கி இருந்தாலும், இப்போது அதுபோன்ற உத்தரவை பிறப்பிக்க முடியாது. மேலும் மனுதாரர்கள் தாக்கல் செய்துள்ள மனுக்களில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று தனியாக கோரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. எனவே தற்போது உங்கள் மனுவை தள்ளுபடி செய்கிறோம். 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மனுக்களை நீங்கள் மீண்டும் தனியாக தாக்கல் செய்து கொள்ளலாம்.  என கூறி இருந்தனர்.

இந்த நிலையில்  சஞ்சனா, அகிலா அன்னபூரணி என்ற இரு  மருத்துவ மாணவிகள்  மருத்துவபடிப்பில் இடம் கிடைக்கவில்லை என கூறி 69 சதவீத இட ஒதுக்கீடுக்கு எதிராக மனுதாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.மேலும்  இட ஒதுக்கீட்டுக்கு எதிராக  சி.வி.காயத்ரி என்பவர்  தொடர்ந்த மூல வழக்கு நவம்பர் மாதம் விசாரிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.