கொச்சி;
கேரளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தி லிருந்து 65 ஆயிரம் பேரை காப்பாற்றிய மீனவர்களுக்கு மீன்வளத்துறை அமைச்சர் மெர்சிக்குட்டியம்மா பாராட்டு தெரி வித்துள்ளார். மீன் தொழிலாளர்கள் நடத்திய மீட்புப் பணியை கேரளம் எக்காலத்திலும் நன்றியுடன் பார்க்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளத்திலிருந்து காப்பாற்றிய எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த மீன் தொழிலாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்க மீன்வளத்துறை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியை அங்கு துவக்கி வைத்த மெர்சிக்குட்டியம்மா மேலும் கூறியதாவது:-
அனைவரும் ஒற்றுமையுடன் நின்றால் எந்த ஒரு துயரத்தையும் எதிர்கொள்ளலாம் என்பதை உலகுக்கு உணர்த்தும் வகை யில், சமூகத்தில் உள்ள அனைத்து பகுதியின
ரும் ஒன்றுபட்டு நின்றோம். அனைத்து அமைப்பினரும் ஒன்றுபட்டு நின்றார்கள். அந்த நேரத்தில் மீன் தொழிலாளர்கள் நடத்திய மீட்பு நடவடிக்கை எடுத்துக்கூற வேண்டியதாகும். ஆகஸ்ட் 14 அன்று இரவு  வீசிய சூறைக்காற்று அனைத்து முன்னெச்சரிக் கைகளையும் தகர்த்தது. பெரியாறும் பம்பையாறும் கரைபுரண்டு செல்லும்போது, கடலும் திருப்பி அடித்தால் என்ன செய்வது என்று அச்சமடைந்தோம். நிலவரத்தை துல்லியமாக கணித்த பிறகே மீன் தொழிலாளிகளை மீட்பு நடவடிக்கை களுக்கு அரசு அழைத்தது என மீன் வளத்துறை அமைச்சர் மெர்சிக்குட்டியம்மா தெரிவித்தார்.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் சிரமப்பட்டு தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அன்றைய தினம் அனைத்து மாவட்டங்களிலும் மீன்வளத்துறையின் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டன. ஒக்கியில் கிடைத்த அனுபவம் நமக்கு முன்னால் உள்ளது. கடல் கொந்தளிப்பு ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்காகவே மீன் வளத்துறை கட்டுப்பாட்டு அறைகளை திறந்தது.

அன்று மதியம் 2 குழுக்கள் பத்தனம்திட்டையில் மீட்புப் பணியில் இறங்கின. கொட்டிக் கொண்டிருந்த மழை பெரும் இழப்புகளை ஏற்படுத்திக்  கொண்டிருந்தபோது, அன்று இரவு கொல்லத்தில் கடற்கரை பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் மீன் தொழிலாளர்களை மீட்புப் பணிகளுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. உறங்கிக்கொண்டிருந்த பலர் எழுப்பப்பட்டனர். கடலுக்குச் சென்ற மீனவர்கள் திருப்பி அழைக்கப்பட்டனர். லாரிகளில் படகுகளுடன் மீன் தொழி லாளர்கள் பத்தனம்திட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதன்பிறகு மீன் தொழிலாளர்கள் பிரச்சனையின் தீவிரத்தை புரிந்து கொண்ட னர். சுயமாகவே நூற்றுக்கணக்கான லாரி களில் படகுகளோடு வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளுக்கு சென்றனர். பத்தனம் திட்டையில் 70 சதவீதம் மக்களை மீட்டது மீன் தொழிலாளர்கள்தான். மீதி 30 சதவீதம் மட்டுமே ராணுவமும் மற்றவர்களும் மீட்டது. அனைத்து மாவட்டங்களிலுமாக 669 படகுகளில் 65 ஆயிரம் பேரை மீன் தொழிலாளர்கள் இவ்வாறு மீட்டனர். தன்னார்வ அமைப்புகள் 259 படகுகளில் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அனைத்துத் தரப்பினரும் மீட்புக்காக களமிறங்கினாலும் மீன் தொழிலாளர்களின் பணி மிகுந்த முக்கியத்துவம் உடையது. துயரத்தின் பாதாளத்தில் வாழும் மீன் தொழிலாளர்களை சமூகத்தில் முன்னிலைக்கு கொண்டுவர வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

You must be logged in to post a comment.